

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படத்துக்கு யு/ ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'என்னை அறிந்தால்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
'என்னை அறிந்தால்' திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) சென்சார் ஆனது. ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் சென்சார் அதிகாரிகள் படம் பார்த்து யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இம்மாதம் 29-ம் தேதி வெளியாகவிருந்த 'என்னை அறிந்தால்' திரைப்படம், பிப்ரவரி 5-ல் தான் ரிலீஸ் ஆகும் என்று ஐங்கரன் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இதனால், யு சான்றிதழ் பெறுவதற்காக 'என்னை அறிந்தால்' திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பவும் வாய்ப்பு உள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யு/ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிட்டால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர்களின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புடன் திரைப்படம் பார்க்க வேண்டும் என்பது விதிமுறை.
குறிப்பாக, யு சான்றிதழ் அல்லாத படங்களுக்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.