

'ஐ' படத்துக்கு எதிராக மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திருநங்கை பாரதி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி கிருஷ்ணவேணி ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் .
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15 அன்று 'ஐ' படம் ரிலீஸ் ஆனது.
படத்தில் திருநங்கை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக 'லிவிங் ஸ்மைல்' வித்யா, பானு உள்ளிட்ட பல சமூக செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'ஐ ' படத்துக்கு எதிராக தணிக்கைக் குழு அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, திருநங்கைகளுக்கான அறக்கட்டளையை நடத்தி வரும் பாரதி கண்ணம்மா இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்கு தொடர உத்தரவிடக் கோரி மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
பாரதி மனுவில் கூறியிருப்பதாவது: '' திருநங்கைகள் மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்மறையாக 'ஐ' படத்தில் திருநங்கைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, படத்தின் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்கு தொடர வேண்டும். மேலும், நடிகர்கள் விக்ரம், சந்தானத்தின் மீதும் வழக்கு தொடர வேண்டும்'' என்று பாரதி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி கிருஷ்ணவேணி ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் .