

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'புலி' படக்குழுவில் பணியாற்றும் 265 பேருக்கும் தங்க நாணயம் பரிசாக அளித்து இருக்கிறார் விஜய்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'புலி' திரைப்படம் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
ஸ்ரீதேவி, சுதீப் , பிரபு, நரேன், தம்பி ராமையா, ஜோ மல்லூரி, அஜய் ரத்னம், இமான் அண்ணாச்சி, ரோபோ ஷங்கர், கருணாஸ், வித்யூ லேகா ராமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தை தமீன் பிலிம்ஸ் மற்றும் பி.டி.செல்வக்குமார் இணைந்து தயாரித்து வருகிறார்கள். நட்டி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
ஈ.சி.ஆர் சாலையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து இப்படத்தின் பாடல் மற்றும் சண்டைக்காட்சியை படமாக்கினார்கள். தலக்கோணத்தில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பொங்கல் தினம் அன்று படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய விஜய், 'புலி' படக்குழுவில் பணியாற்றிய 265 பேருக்கும் தங்க நாணயத்தைப் பரிசாக அளித்துள்ளார் .
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் 'புலி' திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.