

15 நாட்களுக்குள் 1 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் தமிழ்த் திரையுலகில் 'மான் வேட்டை' என்ற படம் தயாராகி இருக்கிறது.
'தீ நகர்', 'நெல்லை சந்திப்பு', 'காசேதான் கடவுளடா', 'அகம் புறம்' ஆகிய படங்களை இயக்கிய திருமலை தற்போது 'மான் வேட்டை' என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இந்தப் படத்தில் ஷரண், தேஜஸ், பிரதீப், சுமன் ஷெட்டி, சுனிதா கோகை, பிரதீப், மாயா, வனிதா, கஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் ஒரு படம் எடுக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இப்படத்தை இயக்கியதாக கூறினார் இயக்குநர் திருமலை.
இப்படத்தின் கதை என்ன என்று கேட்டபோது, "ஷரண், நிலாவை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார். தன் காதலி நிலாவை அழைத்துக் கொண்டு நிம்மதியை தேடி மனிதர்களே இல்லாத, மலைப் பிரதேசத்திற்குச் செல்கிறார். அப்போது அங்கு வரும் மனிதர்களால் இவர்கள் மிருகத்தனமாக கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்ட இவர்கள் மாபெரும் சக்தியாக மீண்டும் உயிர்பெறுகிறார்கள்.
சில நாட்களுக்கு பிறகு…
நான்கு நண்பர்கள் தங்களின் காதலிகளோடு அந்த மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா வருகிறார்கள். இயற்கையை ரசித்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது எதிர்பார்க்காமல் சில திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவரும் காட்டிலேயே கொல்லப்பட்டார்களா? இல்லை… அனைவரும் உயிருடன் தப்பித்துவிட்டார்களா? என்பதுதான் படத்தின் கதை என்றார். மேலும் 14 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டார்.