புலியில் புது இசை: சிலாகிக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத்

புலியில் புது இசை: சிலாகிக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத்
Updated on
1 min read

2014ல் அஜித் நடித்த 'வீரம்' படத்திற்கு இசையமைத்தவர், 2015ல் விஜய் நடித்து வரும் 'புலி' படத்திற்கு இசையமைத்து வருகிறார்... அவர்தான் தேவி ஸ்ரீபிரசாத்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் பேசினோம்.

"2014ம் ஆண்டு எனக்கு ‘வீரம்’ படம் மூலமா நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது. தெலுங்கிலும் பல படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்த 2015ம் ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக ஆரம்பித்திருக்கிறது.

விஜய் படத்திற்கு இசையமைப்பது என்பது ஒரு இனிமையான அனுபவம். அவர் நடிச்ச படங்களில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் 'வில்லு' தான் என்று என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார்.

இயக்குநர் சிம்புதேவன் என்னிடம் 'புலி' படத்தைப் பற்றி பேசும் போதே எனக்கும் அவரும் நல்ல செட்டாகி விட்டது. அவர் ஒரு கார்டூனிஸ்ட் என்பதால், படத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையுமே கார்டூனாக காட்டியதால் எனக்கு ரொம்ப எளிமையாக இருந்தது. 'புலி'யில் புது இசையை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். 'புலி' தலைப்பிற்கே ஒரு பெரிய ரீச் கிடைத்திருக்கிறது.

'புலி' ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். இதற்கு முன்னால் இந்த மாதிரியான படத்திற்கு நான் இசையமைத்ததில்லை. இப்படத்திற்கு நான் பண்ணப் போகிற இசையில் படத்தோட கதைக்கும், பிரம்மாண்டத்துக்கும், அதனோட அழகுக்கும், பொருத்தமா இருக்கணும். அதற்கு ஏற்றார் போல் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

இரண்டு பாடல்களை முடித்து கொடுத்துவிட்டேன். ஒரு பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மொத்தம் 6 பாடல்கள் இருக்கிறது. விஜய், ஸ்ருதிஹாசன் இப்படத்தில் பாடுகிறார்களா என்பது இப்போதே சொல்ல முடியாது. நான் எதையாவது சொன்னால் புலி என்னை சாப்பிட்டு விடும்.

என்னுடைய பாடல்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கணும் என்பதை மனதில் வைத்து தான் அனைத்து பாடல்களையும் பண்றேன். தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணுவதால், தமிழில் ரொம்ப தேர்ந்தெடுத்து தான் பண்றேன்.

என்னோட குரு மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு மிகப்பெரிய இசை அஞ்சலி நிகழ்ச்சியை அடுத்த மாதம் நடத்த இருக்கிறோம். இந்தியாவில் இருக்கிற பெரிய இசைக் கலைஞர்கள் பலரும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். நிறைய பேருக்கு நான் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் சிஷ்யன் என்பது தெரியாது.

நாலைந்து வயது இருக்கும் போதே அவர்கிட்ட மாண்டலின் கற்றுக் கொள்ள போய்விட்டேன். என்னை மிகப் பெரிய மாண்டலின் கலைஞராக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், நான் சினிமா பக்கம் போய்விட்டேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in