கல்கியின் பொன்னியின் செல்வன் அனிமேஷன் திரைப்படமாகிறது

கல்கியின் பொன்னியின் செல்வன் அனிமேஷன் திரைப்படமாகிறது
Updated on
1 min read

வரலாற்று நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் திரைப்படமாக தயாராகிறது.

இப்படத்தை தயாரிக்க இருக்கும் சரவணராஜாவிடம் இது குறித்து கேட போது, "பொன்னியின் செல்வனுக்கு நிறைய வாசகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த நாவல் பிடிக்கும். 2500 பக்கங்கள் கொண்டது என்றாலும் நான் ஐந்து முறை படித்துள்ளேன். அவ்வளவு அற்புதமான படைப்பு அது. எனவே அதை எடுத்துக் கொண்டேன். இவ்வளவு புகழ் பெற்ற அந்தப் படைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிதான் 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் திரைப்படம்.

இன்றைய வணிகமய, உலகமயச் சூழலில் வரலாற்றுப் படைப்புகள் ரசிக்கப்படுமா என்று சிலர் கேட்கிறார்கள். சொல்கிற விதத்தில் சொன்னால் ரசிக்கவே செய்வார்கள். இன்று தமிழ் இளைஞர்கள் தமிழின் பெருமையை, தமிழரின் பெருமையை, வரலாற்றை, மரபை, பாரம்பரியத்தை எல்லாம் அறியாமல் இருக்கிறார்கள். இதை அப்படியே விட்டால் எல்லாம் மறக்கப்பட்டு விடும்.

இன்றைய தலைமுறைக்கு இந்த நாவல் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் தான் இதை 2டி அனிமேஷன் திரைப்படமாக எடுக்கிறோம்.

'பொன்னியின் செல்வன்’ கதையின் கருத்தும் கரையாமல், தகவல்கள் தடுமாறாமல் அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் சுருக்கியும் உருவாக்க இருக்கிறோம்.

அனிமேஷனாக உருவாக்கும்போது அதன் எல்லையும் சுதந்திரமும் பரந்தது. தொழில்நுட்ப சாத்தியங்களில் சிறப்பு சேர்க்க முடியும். இப்படத்தினை அனிமேஷன் இயக்குநர் மு.கார்த்திகேயன் இயக்கவிருக்கிறார்." என்றார்.

இப்படத்திற்காக இசை, வசனம் போன்றவற்றிற்கு மட்டுமல்ல பின்னணிக் குரலுக்கும் கூட பிரபலமானவர்களை, தமிழ் திரையுலக நட்சத்திரங்களை அணுகி இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in