Last Updated : 28 Dec, 2014 05:14 PM

 

Published : 28 Dec 2014 05:14 PM
Last Updated : 28 Dec 2014 05:14 PM

அம்மாவுக்கு பிறகு எல்லாமே ஆசிரியைதான்: முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சரின் நினைவுகளைப் பகிர்கிறார் இயக்குநர் சேரன்

‘‘ஆனா, ஆவன்னாவோடு அன்பையும் ஊட்டி வகுப்பு எடுத்தவங்க எங்க மல்லிகா டீச்சர். நம் வளர்ச்சிக்கு படிப்படியாய் துணை நிற்கும் ஆசிரியர்களை, நினைவில் வைத்து சரியான சந்தர்ப்பத்தில் அவரை சந்தித்து நம் வளர்ச்சி குறித்து பகிர்ந்து கொள்கிறோமா? என்றால் இல்லை. மல்லிகா டீச்சரை சந்திக்க தவறிவிட்டோமே என்ற அந்த கவலை எனக்கும் இருக்கவே செய்கிறது.

முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சரை கடைசியாக 10-ம் வகுப்பு படித்தபோது சந்தித்தேன். இரண்டு நாட்களுக்கு முன் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் என் மனம் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது’’ என்று உருக்கமும், நெகிழ்ச்சியும் ஒருசேர தளர்ந்த குரலுடன் பேசுகிறார் இயக்குநர் சேரன்.

‘ஆட்டோகிராஃப்’ படத்தில் வரும் ‘ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே’ பாடலில் ‘முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்’ என்ற வரிகளை கேட்கும் தருணம் நம்முடைய முதல் வகுப்பு ஆசிரியர், ஆசிரியையின் நினைவுகள் நம் மனதில் வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த பாடலில் சேரன் குறிப்பிட்டிருந்த அவரது மல்லிகா டீச்சர் கடந்த புதன்கிழமை அதிகாலை புதுக்கோட்டை அருகில் உள்ள கரம்பக்குடியில் காலமானார்.

முதல் வகுப்பு மாணவனாக அவரின் நினைவலைகளை சேரன் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள பழையூர் பட்டிதான் எங்கள் கிராமம். எங்கள் ஊருக்கு அருகில் இருந்த வெள்ளலூர் கிராமத்தில் இருந்துதான் மல்லிகா டீச்சர் வருவார். என் அம்மாவும் ஆசிரியை என்பதால் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தார்கள். அம்மாவின் அரவணைப்பிலேயே 5 ஆண்டுகள் இருந்துவிட்டு, திடீரென ஒரு நாள் முழுக்க அம்மாவைப் பிரிந்து பள்ளிக்கூடத்தில் இருந்தபோது, அவரின் பிரிவே தெரியாத வகையில் எங்களை பார்த்துக்கொள்வார், மல்லிகா டீச்சர்.

‘ஆட்டோகிராஃப்’ படத்துக்காக மன தில் தேங்கிக்கிடக்கும் நினைவுகளை எல்லாம் எடுத்து ஒரு பாடலில் புனையும்போது என்னை அறியாமலேயே வந்து விழுந்த வரிகள்தான் ‘முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்’. அந்த முழுப்பாடல் வரிகளையும் நானே எழுதி முடித்தபிறகு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்திருப்பார். அந்த வரிகள் வெளிவந்தபின், இன்றுவரை ஒவ்வொருவரும் தங்களின் முதல் வகுப்பு டீச்சரின் நினைவுகளில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியர், ஆசிரியை மாதிரி ஒரு அற்புதமான உறவை பார்க்க முடியாது. நமக்கு அமையும் ஆசிரியர்களை வைத்துத்தான் நம்முடைய கேரியரே மாறும். பாடத்துக்கு இணையான அன்பை போதிப்பவர்கள் அவர்கள். ஒவ்வொரு டீச்சரும் குலதெய்

வம் மாதிரிதான். மல்லிகா டீச்சர் 2, 3 ஆண்டுகள் மட்டுமே எங்க ஊரில் பணியாற்றிவிட்டு திருமணம் ஆனதும் புதுக்கோட்டைக்கு அருகில் பணி மாற்ற லாகி சென்றுவிட்டார். அதே பள்ளியில் பணியாற்றிய என் அம்மா (கமலா) எங்க ஊர் பள்ளியில் 37 ஆண்டுகளாக, அதே முதல் வகுப்புக்கு பாடம் எடுத்து ஓய்வுபெற்றார். மல்லிகா டீச்சரிடமும், கமலா அம்மாவிடமும் பாடம் பயின்று இன்று பறவைகளாய் திரியும் மாணவர் களில் நானும் ஒருவன் என்பதில் அளவில் லாத மகிழ்ச்சி’’ கண் கலங்கியபடியே மௌனமாகிறார், சேரன்.

மல்லிகா டீச்சரைப் பற்றி அவரது தம்பி அழகுதேசிகன் கூறும்போது, “எங்க அப்பா அழகிரிசாமியும், அம்மா ராமுத் தாயும் ஆசிரியர்கள். அதனால்தான் மல்லிகா அக்காவுக்கு இந்த பணியின் மீது தனி ஆர்வம் வந்தது. மல்லிகா அக்காவை நான்தான் தினமும் சைக்கி ளில் கொண்டுபோய் பழையூர் பட்டி பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வருவேன். பள்ளிக்கு போகும் அக்கா, வீட்டுக்கு திரும்பும் நேரத்தை வைத்துத்தான் அந்த பகுதியில் வயல்வெளியில் வேலை செய்யும் பெண்கள் பொழுதை கணக்கு வைத்து வயல் வேலைக்கு சென்று திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ிருமணத்துக்கு பிறகு அவர் புதுக் கோட்டை மாவட்டம் கரம்பக்குடிக்கு வந்துவிட்டார். அது 70-களின் கால கட்டம். அப்போது ஒரத்தநாடு அருகில் நரிக்குறவர்கள் படிப்பதற்காக ஒரு பள்ளிக்கூடம் திறந்தார்கள். அந்தப் பள்ளிக்கு யாரும் பாடம் எடுக்க போக மாட் டோம் என்று மறுத்த சூழலில் முதல் ஆளாக மல்லிகா அக்கா சென்று பாடம் எடுக்கத் தொடங்கினார். அக்கா இறக்கும்போது அவரது வயது 68. இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கப்போனவர், மறு நாள் காலை எழுந்திருக்கவே இல்லை. தன்னிடம் படிக்கும் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல் நேசித்த நல்ல மனசுக்காரர் அவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x