கிளாசிக்கல் டான்ஸராக நடிக்க வேண்டும்: கயல் ஆனந்தியின் புத்தாண்டு ஆசை

கிளாசிக்கல் டான்ஸராக நடிக்க வேண்டும்: கயல் ஆனந்தியின் புத்தாண்டு ஆசை
Updated on
1 min read

‘‘2014 ம் ஆண்டு முடிவதற்குள் நன்றாக தமிழ் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்திருந்தேன். அதை நிறைவேற்றிவிட்டேன். நினைத்ததை விட நன்றாகவே இப்போது தமிழில் பேசுகிறேன். என் தோழிகள் அதற்காக என்னிடம் ட்ரீட் கேட்கிறார்கள்” என்று கலகலவென சிரித்தவாறு சொல்கிறார் ஆனந்தி. ‘கயல்’ படத்தின் நாயகியான ஆனந்தி புத்தாண்டைக் கொண்டாட, தனது சொந்த ஊரான ஐதராபாத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தபோது சந்தித்தோம்.

2014-ம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருந்தது?

நான் நடித்த ‘கயல்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘தொடர்ந்து இதேபோன்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடி’ என்று மற்றவர்கள் என்னிடம் சொல்லும் அளவுக்கு என்னை அடையாளப்படுத்திய படம் ‘கயல்’. மொத்தத்தில் எனக்கு கடவுளின் அன்பு கிடைத்த ஆண்டு இது. இந்த ஆண்டில் எனக்குக் கிடைத்த நற்பெயரை கெட்டியாக பிடித்து வைத்துக்கொள்வேன்.

அடுத்ததாக என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

சற்குணம் சார் இயக்கும் படத்தில் கிராமத்துப் பெண்ணாக வருகிறேன். வெற்றிமாறன் சார் இயக்கும் ‘விசாரணை’ படத்தில் நான் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்கும் ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 19-ம் தேதி தொடங்குகிறது. அதுவரை ஊரில் இருக்கப் போகிறேன்.

இந்த ஆண்டு வெளியான படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது?

தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி’ படம் பார்த்தேன். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ரேஸ் குர்ரம்’ பார்த்தேன்.தொடர்ந்து ஷூட்டிங் இருந்ததால் படங்களின் கதைகளைக் கேட்பதோடு சரி. எதையும் பார்க்க முடியவில்லை.

தெலுங்கில் இனி நடிக்கப் போவதில்லையா?

இப்போதைக்கு எனக்கு அதில் ஆர்வம் இல்லை. தமிழில் எனக்கு கிடைக்கும் பாத்திரங்கள் மிகவும் நன்றாக இருப்பதால் தமிழில் நடிக்கவே அதிகம் விரும்புகிறேன். அதேபோல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மலையாளப் படங்களில் நடிக்கவும் ஆசை இருக்கிறது.

காதல், டூயட் ஆகியவற்றைக் கடந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை எப்போது தேர்ந்தெடுத்து நடிப்பீர்கள்?

ஆரம்பத்தில் இருந்தே என்னைத் தேடி வரும் எல்லா கதாபாத்திரங்களையும் நான் ஒப்புக்கொள்வதில்லை. எனக்கு பிடித்த பாத்திரங்களில் மட்டும்தான் நடித்து வருகிறேன் .ஒரு படம் முழுக்க கிளாசிக்கல் டான்ஸராக நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. 2015-லாவது அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்.

படிப்பு எப்படி போகிறது?

பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்து வருகிறேன். ரொம்பவே என்ஜாய் பண்ணி படிப்பை தொடர்கிறேன். எந்த சூழலிலும் படிப்பை விட்டுக்கொடுக்க மாட்டேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in