

விஜய் நடித்து வரும் படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யவில்லை என்று இயக்குநர் சிம்புதேவன் தெரிவித்திருக்கிறார்.
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தை தமீன் பிலிம்ஸ் மற்றும் பி.டி.செல்வக்குமார் இணைந்து தயாரித்து வருகிறார்கள். நட்டி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
ஈ.சி.ஆர் சாலையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து பாடல் ஒன்றை படமாக்கி வந்தார்கள். தற்போது அதே இடத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி பங்கேற்று வரும் வாள் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.
படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சமயத்தில் 'மாரீசன்', 'கருடா', 'போர்வாள்' என பல்வேறு தலைப்புகள் செய்திகளாக இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், படக்குழு இன்னும் படத்தலைப்பு எதையும் இறுதி செய்யவில்லையாம். 2015ம் ஆண்டு முதல் நாள் அல்லது பொங்கல் அன்று படத்தலைப்பை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படத்தை ஒரே சமயத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கல்.
ஏற்கெனவே ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தியில் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்து, வெளியிட்டு வருவதால் அவர் மூலமாக இந்தியில் வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறது படக்குழு.