Published : 17 Dec 2014 10:45 am

Updated : 17 Dec 2014 10:45 am

 

Published : 17 Dec 2014 10:45 AM
Last Updated : 17 Dec 2014 10:45 AM

லிங்கா சுமார் படமா?- நடிகர் ராதாரவி கொந்தளிப்பு

ரஜினிகாந்தின் 'லிங்கா' படத்தை விமர்சிப்பவர்களையும், கதைத் திருட்டு தொடர்பாக வழக்கு தொடர்பவர்களையும் நடிகர் ராதாரவி கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறார்.

மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இரு வேடங்களில் நடித்து இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான ‘சண்டமாருதம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன் சேர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் 'மாரி', 'இது என்ன மாயம்' மற்றும் 'பாம்பு சட்டை' ஆகிய படங்களின் அறிமுக விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் அனைத்து படக்குழுவினரும் கூட்டாக பங்கேற்றார்கள்.

இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசியது:

"எனக்கு வாழ வைக்கத்தான் தெரியுமே தவிர, வாழ்த்த தெரியாது. இதில் என்ன தகராறு வரப்போகிறதோ தெரியவில்லை. தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் நான். அனைத்து பக்கங்களிலும் திட்டு வாங்க வேண்டியது இருக்கிறது. ஒரே நேரத்தில் இதே மாதிரி 4 படங்களின் விழா நடித்த வேண்டாம் சரத்குமார். கேசட் வெளியீட்டு விழா எல்லாம் வேண்டாம். இதை பண்ணினாலே யாராவது போய் உடனே நீதிமன்றத்தில் என்னுடைய கதை இது என்று வழக்கு போடுகிறார்கள். பூஜை போடும்போது தெரியவில்லையா இது அவர்களுடைய கதை என்று. முடிவில் தான் தெரியுமா உங்களூக்கு?

படத்தை எடுத்து, விளம்பரங்கள் எல்லாம் சேர்த்து தாலியை அடகு வைத்து பண்ணிக் கொண்டிருக்கிறோம், எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது. திடீரென்று நீதிமன்றத்தில் எப்படி 5 கோடி கட்ட முடியும். சினிமா ஆட்கள் அனைவரும் ஒன்றிணைந்து தலைமை நீதிபதியைப் போய் பார்க்க வேண்டும். 5 கோடி கட்டச் சொன்னால் எப்படி உடனே கட்ட முடியும் என்று கேட்க வேண்டும். ஒரு வாரத்தில் 5 கோடி வசூல் செய்யவே தாலி அந்து போகிறது. எங்கிருந்து போய் 5 கோடி கட்ட முடியும்.

இனிமேல் படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், வீட்டுப் பத்திரம் எல்லாம் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ரிலீஸ் நேரத்தில் எவனாவது என்னுடைய கதை என்று சொல்லுவார். அவருக்கு ஒரு பதில் சொல்ல வேண்டும். ஜேம்ஸ்பாண்ட் கதையை திருட முடியாது என்று தெரியும். ஆனால், அவருடைய கதையை வேறு ரூபத்தில் திருடி நடித்து ஜேம்ஸ்பாண்ட் என்று ஜெய்சங்கர் பெயர் வாங்கி கொண்டு போய்விட்டார். அவர் மீது யார் வழக்கு போட்டார்கள்.

10 வருடங்களுக்கு சிறு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே படம் பண்ணினால் பெரிய ஆளாக ஆகிவிடலாம் என்று சிம்ஹாவைப் பார்த்து ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். அப்படி ஆகவே முடியாது. அப்படி பண்ணினால் சிம்ஹா எப்படி காசு சேர்த்து வீடு வாங்குறது? பெயர் இருக்கும்போது சம்பாதித்தால்தான் உண்டு. ஆறாவது நாளில் காணாமல் போய்விடுகிறோம். இப்போது எல்லாம் 100 நாள் போஸ்டர் அடிக்க வேண்டும் என்றால், 100 எத்தனை சைபர் சார் என்று கேட்கிறான். ஆர்.கே.செல்வமணி பேச்சை எல்லாம் கேட்காத சிம்ஹா, நல்லா சம்பாதிச்சுக்கோ.

கே.எஸ்.ரவிகுமார் டேம் மீது ஏறியும், இறங்கியும் அவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கிறார். இங்கே படம் சுமார் தான் என்கிறார்கள். இவர்களுக்கு என்ன தெரியும் ரவிகுமார் கஷ்டப்பட்டது. அப்படத்தில் ரஜினி ஒரு சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன். படத்திற்கு ஹீரோ தேதிகள் கொடுத்தால்தான் எங்களுக்கு எல்லாம் வேலை. அதைப் பார்த்து விட்டு ஒருத்தர், படம் பரவாயில்லை... படம் தான் கொஞ்சம் நீளம் என்கிறார். கேட்கும் போது எனக்கு வயிறு எரிகிறது.

ரவிகுமார் ரொம்ப திறமைசாலி. முதலில் ரஜினி ரொம்ப யங்காக இருப்பார். அந்த கும்பலோடு என்னைப் போடவில்லை. சுதந்திர போராட்டத்திற்கு முன்பு ஒரு கூட்டத்தை காட்டுவார் பாருங்கள், அதில் போட்டார். இவர் எல்லாம் பழைய ஆள், அந்த லிஸ்ட்ல போடு என்று போட்டார்.

இந்த 4 பட அறிவிப்பு கூட்டத்திலேயே யாராவது ஒருத்தர் இருப்பார். இங்கிருந்து நேரா போய் இது என்னுடைய கதை என்று வழக்கு போட்டு விடுவார். கஷ்டப்பட்டு பணியாற்று இயக்குநர்களை மேலும் கஷ்டப்படுத்தி சாபத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் எல்லாம் இப்படி கிடையாது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் எல்லாம் இப்படி செய்திருக்க முடியாது. அப்போது எல்லாம் படங்கள் அவ்வளவு அழகாக வந்தது.

படபூஜை போட்டு தொடங்குகிறோம் பாருங்கள் அன்று முதல் இது என்னுடைய கதை என்று சண்டைப் போடுங்கள். எங்களுக்கு நிறைய நேரம் இருக்கும் பேசுவதற்கு. பூசணிக்காய் சுற்றும் போது பேசினால் எப்படி? எந்த படத்திற்கு இனிமேல் பிரச்சினை வந்தாலும், சினிமாக்காரர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்" என்றார் ராதாராவி.


ராதாரவிலிங்காகே.எஸ்.ரவிகுமார்ரஜினிசண்டமாருதம்மாரிஇது என்ன மாயம்பாம்பு சட்டை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author