

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர், மனித ரூபத்தில் வாழ்ந்த கடவுள் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84.
பிரபல இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளான ரஜினி, குஷ்பு உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை 7 மணியளில் சிகிச்சை பலனின்றி கே.பாலசந்தர் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக வீட்டிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "கே.பி. சாரின் மறைவு தமிழ் சினிமாவிற்கே ஈடுகட்ட முடியாத இழப்பு. கே.பி. சார் மனித ரூபத்தில் வாழ்ந்த கடவுள்.
என்னை ஒரு நடிகனாக அல்ல, தனது மகனாகவே பாவித்தார். கே.பி. சார் போன்று இன்னோருவரை பார்க்க இயலாது. அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று ரஜினி கூறினார்.