‘லிங்கா’ படத்தை வெளியிட தடை கோரி புது வழக்கு: கே.எஸ்.ரவிகுமாருக்கு நோட்டீஸ்

‘லிங்கா’ படத்தை வெளியிட தடை கோரி புது வழக்கு: கே.எஸ்.ரவிகுமாருக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தை வெளியிடத் தடை கோரி புது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த பி.சக்திவேல், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

முல்லைப் பெரியாறு அணை யைக் கட்டி முடித்த பொறியாளர் பென்னிகுயிக் வாழ்க்கை வர லாற்றை கதையாக எழுதினேன். அதற்கு ‘உயிர் அணை’ எனப் பெயரிட்டேன். எழுத்தாளர் சங்கத்தில் நான் உறுப்பினராக இல்லை என்பதால் சினிமா இயக்குநர்கள் யாரும் எனது கதையைக் கேட்கவில்லை.

2012-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப் பாளர்கள் சங்கத்தில் எனது கதையைப் பதிவு செய்தேன். பின்னர் 21.11.2012 அன்று எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினரானேன். 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பல திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரைக்கதை எழுத்தாளர்களிடம் எனது கதையைக் கூறினேன். எனது கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 19.11.2014-ல் பதிவு செய்தேன்.

இந்த நிலையில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ‘லிங்கா’ படம் முழுவதும் எனது ‘உயிர் அணை’ கதையை அடிப்படையாகக் கொண்டதுதான். இப்படத்தின் எழுத்தாளர் பொன்குமரன் எனது கதையை வஞ்சக நோக்கத்துடன் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியானால் எனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும். எனவே, ‘லிங்கா’ படம் வெளியிடத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த 12-வது உதவி சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன், இயக்கு நர் கே.எஸ்.ரவிகுமார், எழுத்தாளர் பொன்குமரன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in