

திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதில் பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில் நடிகர் ஆர்யா செய்த உதவியால் மட்டுமே 'மீகாமன்' வெளியானதாக, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜபக் தெரிவித்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'மீகாமன்'. ஜபக் தயாரிக்க தமன் இசையமைத்து இருந்தார். கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியானது.
'மீகாமன்' படத்திற்கு திரையங்கம் ஒப்பந்தம் செய்யப்பட்டு வெளியாக இருந்த நேரத்தில், தயாரிப்பாளருக்கு பைனான்சியர் தரப்பில் இருந்து நெருக்கடி ஏற்பட்டது. முந்தைய படங்களுக்காக வாங்கப்பட்ட கடன்கள் என பலதரப்பில் இருந்து நெருக்கடிகள் முற்றியது.
இந்நிலையில், ஆர்யா இப்பிரச்சினையில் தலையிட்டு 'மீகாமன்' படத்திற்கு தான் வாங்கிய சம்பளத்தை விட்டுக் கொடுத்து அப்பிரச்சினையை தீர்த்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பழைய கடன்களுக்கான பிரச்சினைக்கு தானே உத்தரவாதம் அளித்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளர் அனைத்து பிரச்சினைகளிலும் இருந்து விடுபட்டு படமும் திட்டமிட்டப்படி வெளியாகிறது.
ஆர்யா ஒருத்தர் இல்லையென்றால் 'மீகாமன்' இல்லை என்று தன் நண்பர்களிடம் சொல்லி வருகிறார் தயாரிப்பாளர் ஜபக்.