ஷமிதாப் படத்தில் நடிக்க காரணமே கே.வி.ஆனந்த் தான்: தனுஷ் நெகிழ்ச்சி

ஷமிதாப் படத்தில் நடிக்க காரணமே கே.வி.ஆனந்த் தான்: தனுஷ் நெகிழ்ச்சி
Updated on
1 min read

'ஷமிதாப்' படத்தில் நான் நடித்தற்கு காரணம் இயக்குநர் கே.வி.ஆனந்த் தான் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

தனுஷ், கார்த்திக், அமைரா உள்ளிட்ட பலர் நடிக்கும் 'அனேகன்' படத்தை இயக்கி இருக்கிறார் கே.வி.ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

தற்போது பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிந்தவுடன், வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும் என்கிறது படக்குழு.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. அதில் ஒட்டுமொத்த படக்குழுவும் பங்கேற்றது.

இந்நிகழ்வில் தனுஷ் பேசும்போது, "என்னை வைத்து பிரம்மாண்ட படமெடுத்த முதல் இயக்குநர் கே.வி.ஆனந்த் தான். ஒரு பழைய பேன்ட், சட்டை, ஹவாய் செப்பல் போட்டுதான் பெரும்பாலான படங்களில் எனது கெட்டப்பாக இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் நிறைய காஸ்டியூம்களில் நடிக்க வைத்திருக்கிறார்.

நான் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு 'ஷமிதாப்' வாய்ப்பு வந்தது. கதையைக் கேட்டதும் பிடித்துவிட்டது. அவர்கள் கேட்ட தேதிகள் நான் 'அனேகன்' படத்திற்காக ஒதுக்கி இருந்தேன். கே.வி.ஆனந்திடம் விஷயத்தை சொன்னேன். எனக்காக தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்தார். அதனால்தான் என்னால் 'ஷமிதாப்' படத்தில் நடிக்க முடிந்தது.

நடிப்பதற்கு நிறைய இடங்கள் உள்ள இடம் 'ஷமிதாப்'. அந்தப் படத்தில் நான் நடித்ததிற்கு காரணம் கே.வி.ஆனந்த் தான். அதற்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். அவர் மட்டும் தேதிகள் அட்ஜஸ்ட் பண்ண முடியாது என்றால், என்னால் 'ஷமிதாப்' படத்தில் நடிக்க முடிந்திருக்காது.

இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான், முதன் முறையாக கார்த்திக் சாரை சந்தித்தேன். அவரிடம் நெருங்கிப் பழக தயக்கமாக இருந்தது. அவர் படப்பிடிப்பிற்கு வந்ததும், என்னை அருகில் இழுத்து சகஜமாக பேசினார். அவருடன் நடிப்பது எனக்கு பயமாக இருந்தது. அவருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது" என்றார் தனுஷ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in