காப்பியடிப்பதில் கிடைப்பது நிரந்தர வெற்றியல்ல: இயக்குநர் ராம் பேட்டி

காப்பியடிப்பதில் கிடைப்பது நிரந்தர வெற்றியல்ல: இயக்குநர் ராம் பேட்டி
Updated on
1 min read

‘தங்க மீன்கள்’ படத்துக்காக சங்கரதாஸ் சுவாமிகள் விருதை வாங்க இயக்குநர் ராம் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். விழா நடைபெற்ற முருகா திரையரங்கு வளாகத்தில் அவரைச் சந்தித்தோம்.

தங்கமீன்கள் படத்துக்காக நீங்கள் நிறைய சிரமப்பட்டதாக கூறப்படுகிறதே?

சாகசமும், த்ரில்லும் கலந்ததுதான் திரையுலகம். எல்லா திரைப்படங்களிலும் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படும். அதே நேரத்தில் படம் வெளியாகி ஓன்றரை ஆண்டுகளுக்கு பிறகும் அதற்கு விருது கிடைப்பதும், மக்களுக்காக திரையிடப்படுவதும்தான் இப்படத்துக்கு கிடைத்த வெற்றி. இதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஹாலிவுட் இயக்குநர் நோலனின் கனவு படமான இன்டர்ஸ்டெல்லரிலும் தங்கமீன்கள் போன்று அப்பா-மகள் இடையேயான பாசப் போராட்டம் அடிநாதமாக இருக்கிறதே?

நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. அதேநேரத்தில் தங்கமீன்களை சயின்ஸ் பிக்‌ஷனில் பார்த்ததுபோல் இருப்பதாக பலரும் கூறினார்கள். அப்பா-மகள் பாசம் உலகளாவியது. உலகம் முழுக்க அதன் இயல்பை உணர முடியும்.

அடுத்ததாக நீங்கள் இயக்கும் ‘தரமணி’ படத்தை எதை மையமாகக் கொண்டு இயக்குகிறீர்கள்?

‘தரமணி’ திரைப்படத்தை காதலை மையமாகக் கொண்டு எடுத்துவருகிறேன். அப்படத்துக்கு இன்னும் 20 நாள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது.

தமிழ் திரையுலகில் கதைகளைத் திருடும் விவகாரம் அதிகளவில் தலைதூக்கியுள்ளதே?

காப்பிக்கு எப்போதும் மரியாதை கிடையாது. காப்பியில் கிடைப்பது நிரந்தர வெற்றியல்ல. அது கலப்படம். நீண்ட காலம் நிலைத்து நிற்காது. காலம் கடந்தாலும் ஒரிஜினலுக்குதான் மரியாதை கிடைக்கும் என்பதே என் கருத்து.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in