

பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள 'பிசாசு' படத்தின் டீஸர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. (டீஸர் இணைப்பு கீழே)
'பிசாசு' படகுழுவினர் கலந்து கொண்ட இந்தச்சந்திப்பில் முதலில் டீஸர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் பேசியது:
"படத்தின் திரைக்கதை எழுத ஆரம்பித்ததில் இருந்து, என் கூடவே பயணப்பட்டவர் ஒளிப்பதிவாளர் ரவி ராய். இப்படத்திற்காக நாயகன் நாகா கடுமையாக உழைத்திருக்கிறார். 4 மாதங்களாக என் அலுவலகத்திலேயே தங்கியிருந்து நடித்தார். ஒரு சீனை 100 தடவை சரியாக வரவேண்டும் என்று திரும்பத் திரும்ப நடித்தார்.
நாயகி பிரயாகாவுக்கும் கடினமான உழைப்பு தான். இந்தப் படத்தில் அவர் தான் பிசாசாக நடித்திருக்கிறார். பிசாசாக தான் நிறைய காட்சிகள் இருக்கும் என்று சொல்லித்தான் நடிக்க ஒப்பந்தம் செய்தேன். 60 அடி உயரத்தில் ரோப்பில் தொங்கியபடி நடித்திருக்கிறார். தொங்கிக் கொண்டு நடிக்கும் போது பயங்கரமாக அடிபடும். அவருடைய அப்பா, அம்மா படப்பிடிப்பில் அழுவார்கள். நான் அவர்கள் பக்கம் திரும்பி பார்க்க மாட்டேன். இப்போது அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். வேறு எந்த ஒரு நடிகையும் பிரயகா அளவிற்கு ரிஸ்க் எடுத்து நடிப்பது சந்தேகமே.
முன்பு இசையால் என்னை இளையராஜா மிரட்டினார். தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் ஆரால் கொரிலி அவரது பின்னணி இசையால் என்னை மிரட்டியிருக்கிறார்.
'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்திற்கு நீங்களெல்லாம் நல்ல விமர்சனங்கள் கொடுத்தீர்கள். படம் பல காரணங்களால சரியாக போகவில்லை. அப்போது நான் கண்ணீருடன் நின்றதைப் பார்த்து என்னை அழைத்தார் பாலா. எனது கஷ்டத்தை கேட்டறிந்து உடனே தனது நிறுவனத்திற்கு படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். அந்த வகையில், நான் கீழே விழும்போது, என் கையை பிடித்து என்னை காப்பாற்றிவிட்டார் பாலா" என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய பாலா, பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார். அப்போது, "இந்தாண்டு மூன்று படம் தயாரிக்க திட்டமிட்டேன். ஒன்று மட்டும் முடியாமல் போய்விட்டது. அடுத்தாண்டு முதல் 3 படங்கள் தயாரிப்பு, 1 படம் இயக்கம் என்று திட்டமிட்டு இருக்கிறேன்" என்றார்.