

விஜய் தொலைக்காட்சியில் வரும் வாரம் முதல் ‘ஆயுத எழுத்து’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. கிராமத்தில் அடிதடி, அடாவடி என வாழ்பவர் காளியம்மா. கிராமத்துக்கு தான் செய்வதுதான் நல்லது என்று எண்ணுபவர். அரசு அதிகாரிகள், வெளியாட்கள் மீது நம்பிக்கை இல்லாதவர். துணை ஆட்சியரான இந்திரா அந்த கிராமத்துக்கு வருகிறார். இவர்கள் இருவருக்கும் மோதல் வெடிக்கிறது.
இந்நிலையில் காளியம்மா மகன் சக்திவேலுக்கும், இந்திராவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், அவர் காளியம்மாவின் மகன் என்பது இந்திராவுக்கு தெரியவில்லை. இந்த காதல் காளியம்மாவுக்கு எந்த சூழலில் தெரியவருகிறது? படித்த கலெக்டர் பெண்ணை மருமகளாக காளியம்மா ஏற்பாரா? இந்திராவுக்கு உண்மை தெரியும்போது அவர் எடுக்கும் முடிவு என்ன? இதெல்லாம் பல அத்தியாயங்களாக விரிய உள்ளன.
துணை ஆட்சியர் இந்திராவாக ஸ்ரீது கிருஷ்ணன் நடிக்கிறார். இவர் ‘கல்யாணமாம் கல்யாணம்’, ‘ஜோடி’ ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் நன்கு அறிமுகம் ஆனவர். காளியம்மாவாக மவுனிகா நடிக்கிறார். அவரது மகனாக நடிக்கும் அம்ஜத்கான், இத்தொடர் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தொடரை பிரம்மா இயக்குகிறார்.