

பேன்டஸி காமெடிப் பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'சொன்னா புரியாது' இயக்குநர் கிருஷ்ணன் இயக்குகிறார்.
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த 'பலூன்' படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் சினிஷ். தற்போது தயாரிப்பாளராக அறிமுகமாகவுள்ளார். இந்தப் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பேன்டஸி காமெடி பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் யோகி பாபு, 'விஜய் டிவி' ராமர் ஆகியோர் அஞ்சலியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கும் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் இந்தியாவைச் சுற்றிலும் உள்ள மலைப் பிரதேசங்களிலும் நடைபெறவுள்ளது.
விஷால் சந்திரசேகர் இசையமைக்க, அர்வி ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளனர். தற்போது இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது.