Published : 10 Jul 2019 09:40 AM
Last Updated : 10 Jul 2019 09:40 AM

சினிமா பற்றி தெரியாமலேயே உச்சம் தொட்டவர் ரஜினி: நடிகை சுஹாசினி சுவாரஸ்யம்

சினிமா பற்றியே தெரியாமல் வந்து மாபெரும் உச்சம் தொட்டவர் ரஜினிகாந்த். அவர் உட்பட பல கலைஞர்களுக்கும் பள்ளி, கல்லூரியாக திகழ்ந்தவர் கே.பாலச்சந்தர் என்று நடிகை சுஹாசினி கூறினார்.

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் 89-வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் சார்பில் பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த், நடிகர்கள் பார்த்திபன், ரகுமான், நடிகை சுஹாசினி மணிரத்னம், இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் சுஹாசினி பேசியதாவது:

கல்லூரியில் படித்துவிட்டு ‘ஒரு ஸ்கூட்டர், வங்கியில் ஒரு வேலை.. இது போதும்’ என்ற எண்ணத்தில்தான் இருந்தேன். கே.பாலச்சந்தரின் ‘புன்னகை’ படம் பார்த்த பிறகுதான், வாழ்க்கையில் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனக்கு 57 வயது ஆகிறது. அந்த படத்தின் சத்யா கதாபாத்திரம் மாதிரி 10 சதவீதம் இருந்தால் போதும் என பல நாட்கள் நினைத்திருக்கிறேன்.

‘சிந்துபைரவி’ படத்தின் கதையை அனந்து வந்து சொன்னபோது, ‘கல்யாணம் ஆனவருக்கு காதலி’ என்று என் கதாபாத்திரத்தை விளக்கினார். நெகடிவ் சென்டிமென்டாக இருக்குமே, இது சரி வருமா என்று யோசித்தேன். ஆனால், காட்சிக்கு காட்சி பின்னி எடுத்திருப்பார். அதுதான் பாலச்சந்தர்.

கமல், ரஜினி நடித்த ‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில்தான் நடந்தது. ரஜினி அப்போது ‘அபூர்வ ராகங்கள்’ படப்பிடிப்பில் இருந்து கலாகேந்த்ரா அனுப்பும் காரில் வருவார். படப்பிடிப்பு இடைவேளையில் வீட்டுக்கு வெளிப் பகுதியில் சிகரெட் பிடித்துக்கொண்டே நிற்பார்.

யாரிடமும் அதிகம் பேச மாட்டார். கொஞ்சம் பயப்படுவார். உதவி இயக்குநர் வந்து காட்சியை விளக்கிவிட்டு, ‘மேலே பார்’ என்றால் ரஜினி கீழே பார்ப்பார். கேட்டால் கால் அரிக்கிறது என்பார். இப்படி சினிமா பற்றியே தெரியாமல் வந்த ரஜினிதான் மாபெரும் உச்சத்துக்கு சென்றார். இதுபோல திரைத்துறையில் எல்லோருக்கும் ஒரு பள்ளியாக, கல்லூரியாகத் திகழ்ந்தவர். திரைக் கலைஞர்களுக்கு எல்லாவிதமான நவசரமும் கொடுத்தவர் கே.பாலச்சந்தர்.

இவ்வாறு சுஹாசினி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x