

‘பிகில்’ படத்துக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார் விஜய். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் முதன்முறையாகப் பாடியுள்ளார்.
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பிகில்’. இந்தப் படத்தின் மூலம் விஜய் - அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வருகிற தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். விளையாட்டுப் பயிற்சியாளராக இந்தப் படத்தில் நடித்துள்ள விஜய், அதற்கேற்றவாறு தன்னுடைய உடலமைப்பையும் மாற்றியுள்ளார்.
இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடவேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் கோரிக்கையாக இருந்தது. காரணம், 2017-ம் ஆண்டு வெளியான ‘பைரவா’ படத்தில்தான் அவர் கடைசியாகப் பாடினார். அதன்பிறகு வெளியான ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ படங்களில் பாடவில்லை.
இந்நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ‘பிகில்’ படத்தில் விஜய் பாடியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு விஜய் பாடியுள்ளார், அதுவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார் என்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.