

'ஜீவி' இயக்குநர் கோபிநாத் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இதனை விஷ்ணு விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
'எட்டு தோட்டாக்கள்' நாயகன் வெற்றி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஜீவி'. யூகிக்க முடியாத அளவில் திரைக்கதையை நகர்த்திய விதத்தில் இயக்குநர் கோபிநாத்தும், கதாசிரியர் பாபு தமிழும் தமிழ் சினிமாவில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றனர். இதனால் 'ஜீவி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,
இந்நிலையில் 'ஜீவி' இயக்குநர் கோபிநாத், கதாசிரியர் பாபு தமிழ் இணைந்து ஒரு புதிய படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கியுள்ளனர். இதனை விவி ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடிக்கிறார். நாயகி, தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு விஷால் தற்போது எழில் இயக்கத்தில் 'ஜகஜ்ஜால கில்லாடி', விஜய் சேதுபதி எழுத்தில் சஞ்சீவ் இயக்கத்தில் விக்ராந்துடன் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.