Published : 09 Jul 2019 13:15 pm

Updated : 09 Jul 2019 13:15 pm

 

Published : 09 Jul 2019 01:15 PM
Last Updated : 09 Jul 2019 01:15 PM

அரங்கேற்றம் - அப்பவே அப்படி கதை!

மிக மோசமாக, பார்க்கவே ரசிக்கும்படியாகவோ, சிரிக்கும்படியாகவோ இல்லாத கதையைக் கூட சினிமாவாக்கிவிடலாம். ஆனால், பொளேரென்று அறைகிற மாதிரி, சட்டையைப் பிடித்து உலுக்குகிற மாதிரி, ஓங்கி சம்மட்டியால் அடிக்கிற மாதிரி, மனதைப் போட்டு உலுக்குவது போல படம் எடுப்பது, ஆகப்பெரிய ரிஸ்க். ஆனால், அதை உணர்ச்சிபூர்வமாக அல்லாமல், உணர்வுபூர்வமாகக் காட்டி நம்மையெல்லாம் உலுக்கியிருப்பார் பாலசந்தர். அந்தப் படம்... அரங்கேற்றம்.

1973ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியான அரங்கேற்றம்தான், எண்பதுகளிலும் தொந்நூறுகளிலும் பல புரட்சிகளையும் புதுமைகளையும் படமாகக் கொண்டுவந்ததற்கு அரங்கேற்றம் போட்டது.


கிராமம். அக்ரஹாரம். இரண்டுமே அப்படியொரு ஒழுக்கத்துடனும் ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் திகழும் இடங்களாக படித்திருக்கிறோம். வாழ்ந்திருக்கிறோம். வாழ்வதைப் பார்த்திருக்கிறோம். அப்படியொரு கிராமத்து அக்ரஹாரத்தில், ஆச்சாரமான குடும்பம். ஆனால் அளவற்ற குடும்பம். வரிசையாய் ஒவ்வொரு வயது வித்தியாசம் இருப்பது போல மகள்கள், மகன்கள்.

அந்த வீட்டின் தலைவர் சாஸ்திரிகள். நியம நிஷ்டைகளை தவறாமல் கடைப்பிடிப்பவர். எட்டணா காசு கிடைத்தால், அவர் குபேரன். ஆனால், ஒழுங்காக தர்ப்பணம் செய்யாதவரிடம் கோபித்துக்கொண்டு, அந்த எட்டணாவையும் சம்பாதிக்காமல் விடுகிற கண்டிப்புக்காரர்.

அங்கே, அந்த வீட்டில், பசி எப்போதும் நிரந்தரம். ஆனால் பசிக்கு உணவு எப்போதாவதுதான்! படிக்கிற பையனுக்கு நோட்டு வாங்கக்கூட நோட்டு கிடையாது. போதாக்குறைக்கு, குடும்பத்தலைவனின் சகோதரி, தன் வயதுக்கு வந்த மகளுடன் வந்துவிடுகிறாள். ‘எம் புருஷன் எங்களைவிட்டுட்டு, ஓடிப்போயிட்டான்’ என்கிறாள்.

வறுமை சூழ் வீடு அது. ஆனால் கெளரவத்துக்குக் குறைவில்லை. ஆனால் வறுமைதான் வீட்டின் எதிரி என்று புரிகிறது மூத்தவள் லலிதாவுக்கு. அப்பாவிடம் சண்டைபோட்டு சம்மதம் வாங்கி, வேலைக்குச் செல்கிறாள். வீட்டில் சந்தோஷம் கொஞ்சமாக எட்டிப்பார்க்கிறது.

அடுத்து மூத்த தம்பியின் டாக்டர் படிப்பு. சிபாரிசுக்காக சென்னை செல்கிறாள். சின்னாபின்னமாக்கப்படுகிறாள். சகலத்தையும் முழுங்கிக்கொண்டு, ஊர் திரும்புகிறாள். வேலையில் பதவி உயர்வு, இடமாற்றம். ஹைதராபாத் செல்கிறாள். அங்கே மேலதிகாரி, சூறையாடுகிறான். பிறகு அதுவே தொழிலாகிப் போகிறது அவளுக்கு!

தம்பி டாக்டருக்குப் படிக்கிறான், தங்கை பாடகியவாதற்குப் இசைப்பயிற்சி எடுக்கிறாள். அடுத்தடுத்த தம்பி, தங்கைகள் படிக்கிறார்கள். குடும்பத்தில் குடியிருந்த வறுமை விரட்டியடிக்கப்படுகிறது.

அடுத்தடுத்த நிகழ்வுகளில், சமூகமும் அவளின் குடும்பமும் அவளை எப்படிப் பார்க்கிறது, லலிதா என்னானாள் என்பதை அரங்கேற்றி நம்மை அறைந்திருக்கும் படம்தான் அரங்கேற்றம்!

டைட்டில் போடும் போதே பிரமிளாவின் பெயர்தான் முதலில் போடுகிறார்கள். அரங்கேற்ற நாயகி லலிதாதான் பிரமிளா. அவரின் அம்மா எம்.என்.ராஜம். அப்பா ராமுசாஸ்திரிகளாக எஸ்,வி.சுப்பையா. டாக்டருக்குப் படிக்கும் தம்பியாக கமல். ஜெயசுதா, ஜெயசித்ரா. ஊரில் இருக்கிற செந்தாமரை, அவரின் மகன் சிவக்குமார். எல்லோரும் அவரவர் வேலைகளை செம்மையாகச் செய்திருப்பார்கள். அதிலும் பிரமிளா... பிரமாண்ட நாயகி அவர். அப்படியொரு நாயகியாக்கியிருப்பார் கே.பாலசந்தர்.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா என்று ஒரு சிரிப்பு சிரிப்பார் பிரமிளா. செம ஹிட்டு. அந்தச் சிரிப்புதான் இந்த சமூகத்தையும் அவலங்களையும் பார்த்து சிரிக்கிற கேவலமானச் சிரிப்பு அது.

கிழிசல் புடவையுடன் இருப்பார் பிரமிளா. சிவகுமார் அவருக்குப் புடவை தருவார். அதை அப்பா எஸ்.வி.சுப்பையா பார்த்துவிடுவார். எல்லோரும் சாப்பிட உட்கார்ந்திருக்கும் போது, வீட்ல ஒருதப்பு நடந்திருக்கு. அது மன்னிக்கவே முடியாது என்பார். அம்மா ராபிச்சைம்மா என்று குரல்கேட்கும். இதைப் பண்ணினதுக்கு பிச்சை எடுக்கலாம் என்பார். கடைசியில் அந்தப் புடவையும் பிரமிளாவின் உணவும் பிச்சைக்காரிக்குப் போகும்!

அத்தைக்காரி சினிமாவுக்குப் போக காசு கேட்பாள். போவாள். வீட்டில் உணவில்லை. சின்னப்பயலுக்குப் பசி. யாருக்கும் தெரியாமல் வெளியே போய், ராப்பிச்சைக்காரியிடம் உணவு வாங்கிச் சாப்பிடுவான். தெரிந்ததும், நொந்து கோபமாகிற அம்மா, அவனை அடித்து வெளுப்பாள். பசியைப் பொறுத்துக்கமுடியலியா என்பாள். உனக்கு கோபத்தைப் பொறுத்துக்கமுடியல. அத்தைக்கு சினிமா ஆசை. அதைப் பொறுத்துக்கமுடியல என்பார் பிரமிளா.

அன்றிரவு. விஷம் கலப்பாள் அம்மா. அதைத் தடுத்துக் காப்பாள் பிரமிளா. இனிமே நான்தான் உனக்கு அம்மா. ஏன்... ராமு சாஸ்திரிகளுக்கும் சேர்த்துதான் அம்மா என்பார் பிரமிளா.

சென்னையில், ’பரவாயில்லயே. காசுபணம் எதுவும் இல்லாம, காரியத்தை சாதிச்சிட்டியே’ என்பார் ஒரு பெண். உடனே பிரமிளா, ’காசுபணம் இல்லாமலும் காரியத்தைச் சாதிக்க வழி இருக்கு’ என்பார்.

தங்கைக்குத் திருமணம். ஊரில் இருந்து வந்திருப்பார். அம்மா கண்ணில் படவே மாட்டார். பார்த்தால் அம்மாக்காரி மாசமாக இருப்பாள். வெட்கம். அப்போது பின்னணியில், ‘அம்மா... ராப்பிச்சைம்மா’ என்று குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். செருப்பால் அடித்த மாதிரியான காட்சி.

அம்மா ராப்பிச்சைக்கு உணவு போடுகிற சாக்கில் நழுவி வாசலுக்குப்போவாள். அங்கே வந்த பிரமிளா... ‘உங்கிட்ட ஒண்ணே ஒண்ணு கேக்கறேன். இத்தனை வருஷமா இங்கே இருக்கியே.. இதை நீ பாக்கவே இல்லியாம்மா’ என்பார். கேமிரா அங்கே காட்டும். அளவற்ற குடும்பம், இரண்டுக்கு மேல் எப்போதுமே வேண்டாம் விளம்பரம்.

நீலுவிடம் பேசிக்கொண்டிருப்பார் பிரமிளா. அப்போது குழந்தை ஒன்று, முந்தானையை எடுத்து விளையாடும். அது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார். பிறகு, ‘ஆம்பளன்னாலே மரத்துப்போச்சு’ என்பாள். திக்கென்றாகிவிடும் அம்மாவுக்கு. ‘போடி அசடு... மறந்துபோச்சுன்னு சொல்லிருக்காடி’ என்பார் சுப்பையா. கலங்கவைத்துவிடும் காட்சிகளும் கனக்கச் செய்துவிடும் காட்சிகளுமாக கதறடித்திருப்பார் பாலசந்தர்.

தங்கையைத் திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளையைப் பார்த்ததும் பிரமிளாவுக்கு ஷாக். அந்த மாப்பிள்ளைப்பையன் சசிக்குமாருக்கும்தான். பிளாஷ்பேக். எல்லாம் முடிந்த பிறகு,நாளைக்கு ஊருக்குப் போறேன் என்பான் அவன். ‘ஆத்துக்குப் போய் தோப்பனார் என்ன சொல்லப்போறாரோ’ என்பார் பிரமிளா. ஷாக்காகி, விறுவிறுவென அருகில் வந்து, ‘நீ பிராமணப் பெண்ணா’ என்று கேட்டுவிட்டு, பளேரென அறைவான். போகிறவனை நிறுத்தி, அவனருகில் வந்து, அவன் தோளில் இருக்கிற பூணூலைக் காட்டி, ‘நீ பிராமணனா’ என்று கேட்டுவிட்டு, பொளேரென அறைவார் பிரமிளா. தியேட்டரே கைத்தட்டி, கனத்துப் போன இதயத்துடன், பாலசந்தரை மானசீகமாக கைகுலுக்கும்.

73ம் வருடம் வெளிவந்த படம் அரங்கேற்றம் என்றால், 45 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இப்படிப் பொட்டிலடித்தாற்போல் சொல்ல கே.பாலசந்தரால் மட்டுமே சொல்ல இயலும்.

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது என்றொரு பாடல். மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் என்றொரு பாடல். மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா என்றொரு பாடல். ஒவ்வொரு பாட்டிலும் கண்ணதாசன் தன் பங்குக்கு கதையின் கனத்தை, கவிதையாக்கித் தந்திருப்பார். வி.குமாரின் இசையும் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும்.

சிவகுமார் இறந்துவிட்டதாக தர்ப்பணம் நடக்கும். உயிருடன் பார்த்தேன் என்று பிரமிளா சொல்லுவார். சந்தோஷமா இருக்கியாம்மா என்பார் செந்தாமரை. எல்லாரையும் சந்தோஷமா வைச்சிருக்கேன் என்பார்.

தன் மகள் என்ன செய்து குடும்பத்தை உயர்த்தியிருக்கிறாள் என்று தெரிந்ததும் சுப்பையா, அவளுக்குத் தர்ப்பணம் செய்வார். பிறகு தம்பி கமல், அக்கா பிரமிளாவை வீட்டை விட்டுத் துரத்துவார். அவ வேணாம், அவ படிச்ச எம்.பி.பி.எஸ் மாப்பிள்ளை மட்டும் வேணுமா என்பார் எம்.என்.ராஜம். சுப்பையாவும் துரத்தச் சொல்லுவார். அவ இல்லேன்னு தர்ப்பணம் பண்ணிட்டு, இப்ப அவளை வெளியே போகச் சொல்ல எந்த உரிமையும் இல்ல என்பார் ராஜம். அம்மா, அவர் இன்னிக்கிதான் தர்ப்பணம் பண்ணிருக்கார். நான் எப்பவோ செத்துட்டேம்மா என்பார்.

வீட்டை விட்டு துரத்த, சிவகுமார் வீட்டில் தஞ்சம். உனக்கும் என் பையனுக்கும் கல்யாணம். உன் சம்மதம் சொல்லப்போறியா இல்லியா என்பார் செந்தாமரை. எது எதுக்கோ சம்மதிச்சவ நான். இப்ப என் கல்யாணத்துக்கு சம்மதிக்கணுமா என்பார்.

நிறைவாகக் கல்யாணமும் ஆகிவிடும். அங்கே, கடற்கரையில், டால்டா டப்போவுடன் அத்தான் என்று எழுதிய டப்பாவுடன் பைத்தியமெனத் திரிந்தாளே... தங்கம் என்றொருத்தி! முன்னதாக அவள் கடலலையில் இறந்துவிட்டதைத் தெரிந்துவைத்திருப்பாள்.

இப்போது, லலிதா எனும் பெண், குடும்பத்துக்காக தன் கற்பையும் மானத்தையும் கெளரவத்தையும் தொலைத்து நிற்கும் பெண், டால்டா டப்பாவுடன், டபடபடபடபட என்று தட்டிக்கொண்டே தங்கத்தைத் தேடுவாள். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்...!

வழியெங்கும் மனநிலை பாதிக்கப்பட்ட, சிதைவுற்ற, நன்றி மறந்த காயத்தால் துடிக்கப்பட்ட, துரோகத்தால் உலகமே இடிந்துவிட்டது என மனம் கலங்கி வெடித்தவர்கள், சாலைகளில் நடமாடிக்கொண்டிருப்பார்கள், இந்த உலக நினைப்பே இல்லாமல்! அவர்களில் லலிதாக்களும் இருக்கலாம். லலிதா என்பது பெண் அல்ல... மனிதம்!

எப்போது பார்த்தாலும் அன்றிரவின் தூக்கத்தைக் கலைத்துவிடும் மகாவலிமை கொண்ட அரங்கேற்றம்... பாலசந்தர் கத்தியின்றி ரத்தமின்றி செல்லுலாய்டில் நிகழ்த்திய யுத்தங்களில் ஒன்று!


அரங்கேற்றம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x