

அருண் விஜய் நடிப்பில் உருவாகும் 'பாக்ஸர்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திடீரென இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.
'தடம்' படத்தைத் தொடர்ந்து ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கி வரும் ‘அக்னிச் சிறகுகள்’, பிரபாஸ் உடன் ‘சாஹோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் அருண் விஜய்.
'பாக்ஸர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டன. இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக மலேசியா மற்றும் வியட்நாமில் குத்துச்சண்டை பயிற்சி பெற்றுள்ளார் அருண் விஜய். ரித்திகா சிங், சஞ்சனா கல்ராணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு (ஜுலை 4) திடீரென 'பாக்ஸர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. அதில் அருண் விஜய்யின் உடலமைப்பு மாற்றம் மற்றும் போஸ்டர் வடிவமைப்பு ஆகியவற்றுக்காக படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பின்னணி என்ன?
திடீரென 'பாக்ஸர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் "'பாக்ஸர்' ஃபர்ஸ்ட் லுக் பார்த்து ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இப்போது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் எண்ணமே இல்லை.
'மாஃபியா' ஃபர்ஸ்ட் லுக் இப்போது தான் வெளியானது. அதற்கு கிடைத்த வரவேற்பால் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். 'பாக்ஸர்' படத்தைப் பொறுத்தவரை ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடலாம் என்று நினைத்தோம். எதுவுமே சொல்லாமல் திடீரென வந்துவிட்டதே என்று வருத்தப்பட்டேன்.
இணையத்தில் லீக்காகிவிட்டதால் தான், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுவிட்டார்கள் எனத் தெரியவந்தது. மாலை 6 மணிக்கே வெளியானதால், அதைத் தடுக்க எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை. பெரும் வைரலாகிவிட்டது. ஆகையால் வேறு வெளியின்றி இமான் சாரை வைத்து வெளியிட்டுள்ளனர். அதற்கு வரும் வரவேற்புக்கு நன்றி.
நீங்கள் போஸ்டரில் பார்ப்பது என்னுடைய 9 மாத கடின உழைப்பு. இது எளிதாக எடுத்து முடித்துவிடக்கூடிய சாதாரணமான படமல்ல. நிறைய உடல் உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால் நேரமெடுத்துப் பண்ண வேண்டிய படம். என்னுடைய 100% உழைப்பை அனைத்துப் படங்களுக்குமே கொடுத்து வருகிறேன். அதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி. இதே புத்துணர்ச்சியுடன் என் பயணத்தைத் தொடர்வேன்" என்று தெரிவித்துள்ளார் அருண் விஜய்.