Last Updated : 06 Jul, 2019 04:51 PM

 

Published : 06 Jul 2019 04:51 PM
Last Updated : 06 Jul 2019 04:51 PM

முதல் பார்வை: களவாணி 2

வேலை வெட்டி இல்லாமல் நண்பர்களுடன் திரியும் நாயகன், காதலுக்காக பஞ்சாயத்துத் தலைவருக்கான தேர்தலில் வேட்பாளராக நின்றால், களவாணித் தனத்தால் தலைவராக வென்றால் அதுவே 'களவாணி 2'.

நாயகன் விமலுடன் படித்த நண்பர்கள் லண்டன், அமெரிக்கா என்று செட்டில் ஆகிவிட, படிக்காமல் வேலையும் செய்யாமல் அரசனூரை விட்டுப் போகமாட்டேன் என்று வெட்டியாய் ஊர் சுற்றித் திரிகிறார். ஓவியாவின் ஒற்றை வார்த்தை அவருக்குள் பஞ்சாயத்துத் தலைவர் ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை எழுப்புகிறது. ஒரு பக்கம் ஓவியாவின் அப்பா வேட்பாளராகவும், இன்னொரு பக்கம் விமலின் மாமா வேட்பாளராகவும் களம் இறங்குகின்றனர்.

இந்த சூழலில் விமலும் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆனால், 4 வாக்குகளைத் தவிர வேறு யாரும் விமலுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்கிற அளவுக்கு விமல் அண்ட் கோ அவமானப்படுகிறார்கள், அசிங்கப்படுகிறார்கள். இந்நிலையில் விமல் என்ன செய்கிறார், அவரின் காதல் என்ன ஆனது, தேர்தலில் வெற்றி பெற அவர் செய்யும் வியூகங்கள் என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'களவாணி' படத்தை இயக்கிய சற்குணம் அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். ஆனால், முதல் பாகத்தில் இருந்த புதுமையும் திரைக்கதை நேர்த்தியும் இரண்டாம் பாகத்தில் இல்லை. கதாபாத்திரங்களின் வார்ப்பிலும் இயக்குநர் கோட்டை விட்டிருக்கிறார்.

'கில்லி', 'கிரீடம்', 'குருவி' ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த விமல் 'பசங்க' படத்தின் மூலம் அறிமுக நாயகன் ஆனார். 'களவாணி' படம்தான் அவருக்கான அடையாளத்தைக் கொடுத்தது. தற்போது அதன் இரண்டாம் பாகமே விமலின் 25-வது படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் விமலுக்கு வாழ்த்துகள். ஒருவிதத்தில் பார்த்தால் இயக்குநர் சற்குணம், விமல், ஓவியாவுக்கு இது முக்கியமான படம். இன்னும் சொல்லப்போனால் மறு வருகைக்கான படம் என்று சொல்லலாம். ஆனால், அதை மூவருமே இன்னும் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

'களவாணி' படத்தின் தொடர்ச்சியாக 'களவாணி 2' இல்லையென்றாலும் கூட, முதல் பாகத்தின் முக்கிய அம்சங்களை இயக்குநர் சற்குணம் இரண்டாம் பாகத்தில் பயன்படுத்தியுள்ளார். 9 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த 'களவாணி' படத்தின் அறிக்கி என்ற அறிவழகன் கதாபாத்திரத்தில் விமல் அச்சு அசலாக இப்போதும் பொருந்துகிறார். அதே முகத் தோற்றம், களவாணித்தனம், பொய்யான வாக்குறுதி என்று அறிக்கி கதாபாத்திரத்துக்கு பாதகம் இல்லாமல் நடித்திருக்கிறார். ஆனால், அதில் எந்தப் புதுமையும் வித்தியாசமும் இல்லாமல் முதல் பாகத்தின் டெம்ப்ளேட்டாகவே இருப்பதுதான் நெருடல்.

ஓவியாவுக்கு அதிகம் வேலையில்லை. அழகாக வருகிறார், போகிறார். காதலனைத் தவறாகப் புரிந்துகொள்வது பின் சேர்வது என வழக்கமான கதாநாயகிக்குரிய பங்களிப்பில் குறையில்லாமல் நடித்துள்ளார்.

'ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா என் மகன் அன்னபோஸ்ட் தலைவர்' என்பதையே அட்சரம் பிசகாமல் பேசுகிறார் சரண்யா பொன்வண்ணன். முதல் பாகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பன்ச் என்பதால் அதையே பட்டி டிங்கரிங் பார்த்துப் பயன்படுத்தியுள்ளனர். அதைத் தவிர சரண்யா பொன்வண்ணனுக்கும் இளவரசுவுக்கும் படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை. மகன் மீதான பிணைப்பையும், வெறுப்பையும் இருவருமே சரியாக வெளிப்படுத்தாத அளவுக்கு திரைக்கதை பலவீனமாக உள்ளது.

மயில்சாமி, வினோதினி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.

மாசானியின் ஒளிப்பதிவு அரசனூரின் வளமையை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. மணி அமுதவன், வி2, ரொனால்ட் ரீகன் ஆகியோர் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் தங்கவில்லை. நடராஜன் சங்கரனின் பின்னணி இசை காட்சிகளுக்குப் பொருத்தம்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் சில சங்கதிகளை மட்டும் வைத்து புது அம்சங்களை சேர்த்த விதத்தில் இயக்குநர் சற்குணத்தின் புத்திசாலித்தனம் பாராட்டத்தக்கது. ஆனால், தேர்தல் என்கிற ஒற்றை விஷயத்தை வைத்துக்கொண்டு எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் படத்தை நகர்த்தியிருப்பதுதான் சோகம். நகைச்சுவைக் காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை. விக்னேஷ் காந்த், கஞ்சா கருப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் அயர்ச்சியையும் சோர்வையும் வரவழைக்கின்றன. ஓட்டு கேட்கச் செல்லும்போது எதிரணியினர் கஞ்சா கருப்பை அள்ளிக் கொண்டு செல்லும் காட்சியில் மட்டும் நகைச்சுவை தெறிக்கிறது.

விமலின் வியூகங்களும் ஏனோதானோவென்று இருக்கிறதே தவிர, புத்திசாலித்தனம் துளியும் தென்படவில்லை. ஓவியாவின் தந்தையை நம்ப வைப்பதற்காக சித்தப்பா என்று அழைப்பதெல்லாம் வேற லெவல் திருப்பம் என்று இயக்குநர் நம்பியிருக்கிறார். ஆனால், அது ரசிகர்களின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் விடப்பட்ட சவால்.

தாயன்பனின் எழுத்தில் ஒரு கதையாக இருக்கும் படம் திரைக்கதையாக விரிவடையாமல் கதையின் போக்கிலும், கதாபாத்திர வார்ப்பிலும் மிகவும் சுருங்கிப் போவதால் படம் தடம் தெரியாமல் திணறுகிறது. இந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் சாதாரணமாக ஒரு படம் பார்க்க நினைப்பவர்கள் 'களவாணி 2'-க்கு விசிட் அடிக்கலாம்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x