முதலில் அதர்வா; பின் சந்தானம்: இயக்குநர் கண்ணன் திட்டம்

முதலில் அதர்வா; பின் சந்தானம்: இயக்குநர் கண்ணன் திட்டம்
Updated on
1 min read

முதலில் அதர்வா படத்தை முடித்துவிட்டு, பின் சந்தானம் படத்தைத் தொடங்க இயக்குநர் கண்ணன் திட்டமிட்டுள்ளார்.

கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பூமராங்'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின் போதே, அடுத்தும் இக்கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளதாக அறிவித்தார்கள்.

ஆனால், சில நாட்களில் சந்தானத்தைச் சந்தித்து புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் கண்ணன். அதில் கவுண்டமணியை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். இந்தச் செய்தியும் வெளியானது.

இந்நிலையில், முதலில் அதர்வா படத்தைத் தொடங்கவே இயக்குநர் கண்ணன் முடிவு செய்துள்ளார்.  ஜூலை 15-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன், ஒளிப்பதிவாளராக '96' படத்தின் ஒளிப்பதிவாளர் ஷண்முக சுந்தரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தின் வசனத்தை கபிலன் வைரமுத்து எழுதவுள்ளார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையிலும், சில காட்சிகள் மற்றும் பாடல்களை வெளிநாட்டிலும் படமாக்க இயக்குநர் கண்ணன் முடிவு செய்துள்ளார். அதே போன்று, இந்தப் படத்தையும் ஒரே ஷெட்யூலில் முடிக்கவும் படக்குழு திட்டமிட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in