

மீண்டும் விஷ்ணு விஷால் - கருணாகரன் நடிப்பில் 'இன்று நேற்று நாளை 2' உருவாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆர்.ரவிகுமார் இயக்குநராக அறிமுகமான படம் ‘இன்று நேற்று நாளை’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சி.வி.குமார் மற்றும் ஞானவேல் ராஜா இணைந்து தயாரித்த இந்தப் படத்துக்கு, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்திருந்தார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. முதல் பாகத்தை எழுதி, இயக்கிய ஆர்.ரவிகுமார், இரண்டாம் பாகத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். முதல் பாகத்தில் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.பி.கார்த்திக், இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.
இதில் நடிப்பதற்காகp பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியில் முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், கருணாகரன் மீண்டும் 2-ம் பாகத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அடுத்த வருடம் (2020) கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.