

மணிரத்னம் தயாரிக்கவுள்ள 'வானம் கொட்டட்டும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார் சித் ஸ்ரீராம்.
'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இதற்காக பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தன்னுடைய தயாரிப்பில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை மணிரத்னம் வெளியிட்டுள்ளார். 'வானம் கொட்டட்டும்' என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை 'படைவீரன்' படத்தின் இயக்குநர் தனா இயக்கவுள்ளார்.
விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு முதலில் இசையமைப்பாளராக '96' படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஒப்பந்தமானார். ஆனால், அவர் தற்போது பிஸியாக இருப்பதால், அவருக்குப் பதிலாக சில முன்னணி இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இறுதியில், பல்வேறு வெற்றிப் பாடல்களை பாடிய சித் ஸ்ரீராமை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தவுள்ளது படக்குழு. ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், சந்தோஷ் நாராயணன், யுவன், இமான் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடியுள்ளார் சித் ஸ்ரீராம். இவருடைய பாடலுக்கென்று தனி இளைஞர் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
'வானம் கொட்டட்டும்' படத்தின் கதை - வசனத்தை மணிரத்னமும், தனாவும் இணைந்து எழுதியுள்ளனர். பிரீத்தா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக அமரன் பணிபுரியவுள்ளார்.