

தான் ஒப்புக் கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க தனுஷ் முடிவு செய்துள்ளார்.
'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் படங்களைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் தனுஷ். இதில், 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இப்படங்களை முடித்துவிட்டு, மீண்டும் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் தனுஷ். இதனை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். தனுஷை வைத்து மூன்று படங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் போட்டார் தயாரிப்பாளர் தாணு.
அதில், முதலில் 'அசுரன்' மற்றும் மாரி செல்வராஜ் இயக்கும் படம் ஆகிய 2 படங்கள் முடிவானது. மூன்றாவது படமாக செல்வராகவன் படம் முடிவாகியுள்ளது. இதற்கான கதை எழுதும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் செல்வராகவன். இந்தப் படம் 2020-ல் தொடங்கும் எனத் தெரிகிறது.
'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன' ஆகிய படங்களில் ஏற்கெனவே இணைந்து பணியாற்றியுள்ளது தனுஷ் - செல்வராகவன் கூட்டணி. தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைவதால், பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மேலும், 'புதுப்பேட்டை' படத்தின் 2-ம் பாகம் குறித்து அவ்வப்போது கேள்விகள் எழும். அதற்கு செல்வராகவன் விளக்கமளித்து வந்தார். தற்போது இந்தக் கூட்டணி இணைப்பில் உருவாவது 'புதுப்பேட்டை 2' படமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.