

’’நாயகன் படத்தில் போலீஸ் அதிகாரி வரும் காட்சியை, பாலகுமாரன் சொன்னதும் சிலிர்த்துப் போனார் மணிரத்னம். அதுதான் பாலகுமாரன் ஸ்பெஷல்’’ என்று இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா தெரிவித்தார்.
‘இந்து தமிழ் திசை’ இணையதளம் சார்பில், என்றென்றும் எழுத்துச்சித்தர் எனும் ஆவணப்படம் தயாரித்தது. இதில் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா, பாலகுமாரன் உடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அந்த பிரத்யேகப் பேட்டி இதோ...
‘நானும் பாலகுமாரனும் நல்ல நண்பர்கள். அடிக்கடி அவர் வீட்டுக்குச் சென்று வருவேன். அதேபோல் அவரும் வருவார். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.
அப்புறம் இன்னொரு விஷயம்... இது நிறைய பேருக்குத் தெரியாது. மணிரத்னம், கமல் இணைந்த ‘நாயகன்’ படத்துக்கு பாலகுமாரன் தான் வசனம். அப்போது நான் இயக்குநராகவில்லை. ‘சத்யா’ பட வேலைகள் மெல்ல மெல்ல ஆரம்பித்த தருணம் அது.
ஒரு காட்சியை, வித்தியாசமாகவும் ஆழமாகவும் செய்வதற்கு ஆசைப்பட்டார். மிகப்பெரிய போலீஸ் அதிகாரி, கமல்ஹாசனை, அதாவது வேலுநாயக்கரை வந்து சந்திக்க்கிற காட்சி. நானும் பாலகுமாரனும் விவாதித்தோம். அதன் முடிவில், மளமளவென அந்தக் காட்சியை அப்படியே கண்முன் நிறுத்திவிட்டார்.
மணிரத்னத்திடம் இந்தக் காட்சியை விவரித்த போது, அவரும் அசந்து போனார். மிகப்பிரமாதம் என்று பாராட்டினார். அந்தக் காட்சி, இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதுதான் பாலகுமாரன் ஸ்டைல்.
கே.பாலசந்தர் சாரிடம் நான், பாலகுமாரன் இரண்டுபேருமே, உதவி இயக்குநர்களாக இருந்தோம். அதேபோல், நான் இயக்குநரான பிறகு, ‘பாட்ஷா’ படத்தை இயக்கியபோது, பாலகுமாரன் வசனம் எழுதினார். இதைச் சொல்லவேண்டாம்... ஒவ்வொரு வசனமும் அவ்வளவு ஷார்ப்பாக, ஸ்டைலாக இருக்கும். படத்தில் ரஜினி என்றில்லாமல், பல கேரக்டர்கள் பேசும் வசனங்கள் அனைத்துமே பளிச்பளிச்சென இருக்கும்.
இவ்வாறு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்தார்.
இன்று (ஜூலை 5ம் தேதி எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்தநாள்)
என்றென்றும் எழுத்துச்சித்தர் வீடியோவைக் காண...