இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? - பாரதிராஜா விளக்கம்

இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? - பாரதிராஜா விளக்கம்
Updated on
1 min read

இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்று பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.

2017 - 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில், தலைவராக விக்ரமனும், பொதுச் செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக பேரரசுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே, 2019 - 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் குறித்த இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிட விரும்பவில்லை என்பதால், ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு தனது இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் பாரதிராஜா. தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடவே, தன் இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை எப்படி இயக்குநர் சங்கத் தலைவராக தேர்வு செய்யலாம் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

இந்தச் சூழலில் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு பாரதிராஜா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் மீது நீங்கள் வைத்திருக்கும் அளவிட முடியாத பாசத்துக்கு, வாழ்நாள் முழுவதும் பணியாற்ற ஆசை தான். நடைபெற்ற பொதுக்குழுவில் என்னை ஏகமனதாக தேர்ந்தெடுத்தமைக்காக என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இருப்பினும், ஏற்கெனவே நான் அறிவித்தபடி என் சொந்தப் பணிகளும், சில சூழ்நிலைகளும் என்னைத் தற்காலிகமாக ஒதுங்கி இருக்கச் சொல்கின்றன.

எனக்கு மூளைச்சலவை செய்து, என் மனதை திசைதிருப்பியதாக யார் மீதோ பழியைப் போடுவது எனக்கு மனவேதனையைத் தருகிறது. எந்த விஷயத்திலும் தைரியமாகவும் தெளிவோடும் முடிவெடுப்பவன் இந்த பாரதிராஜா. தற்காலிகமாக மட்டுமே ஒதுங்கியிருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் நான் உங்களோடு இருப்பேன், பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார் பாரதிராஜா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in