

பலரும் விமர்சித்தவுடன் மாறிவிடும் பழக்கமில்லை என்று 'களவாணி 2' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அளித்த பேட்டியில் ஓவியா தெரிவித்துள்ளார்.
சற்குணம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’. அதன் 2-ம் பாகத்தை மீண்டும் சற்குணமே இயக்கி தயாரித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, இளவரசு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோருடன் ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் நடித்துள்ளார்.
ஜுலை 5-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் விமல் தவிர்த்து மற்ற அனைவருமே கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது ஓவியா அளித்துள்ள பேட்டியில் '90 எம்.எல்' சர்ச்சை குறித்துப் பேசியுள்ளார்.
அதில், “ஆரம்ப காலத்தில் பல படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். சில படங்களில் மட்டுமே கவர்ச்சியாக நடித்தேன். இம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை.
சமீபத்தில் நான் நடித்த '90 எம்.எல்' பல சர்ச்சைகளைக் கிளப்பியது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. நாம் நடித்த படம் தயாரிப்பாளர் உட்பட அனைவருக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுத்ததே என்று மட்டுமே பார்ப்பேன். இந்தப் படத்தில் நடித்தால் நம்முடைய இமேஜ் போய்விடுமே என்றெல்லாம் கவலைப்பட மாட்டேன்.
'90 எம்.எல்' படம் மாதிரியே பல கதைகள் வந்தன. அந்தப் படத்தில் 2-ம் பாகம் எடுத்தாலும் நடிக்கத் தயார். பலரும் விமர்சித்தவுடன் மாறிவிடும் பழக்கம் எனக்கில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் ஓவியா.