

‘கபிர் சிங்’ படத்துக்கு வந்ததைப் போல ‘ஆதித்யா வர்மா’ படத்துக்கு எதிர்ப்பு வராது என நினைக்கிறேன் என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் வங்கா இயக்கிய இப்படத்துக்கு, மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. எனவே, தமிழ் மற்றும் இந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்துள்ளனர்.
தமிழில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தயாராகியுள்ள இந்தப் படத்தை, சந்தீப் வங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க, பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியில் ‘கபிர் சிங்’ என்ற தலைப்பில் தயாரான இந்தப் படம், கடந்த ஜூன் 21-ம் தேதி ரிலீஸானது. ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடித்த இந்தப் படத்தை, சந்தீப் வங்காவே இயக்கினார். இந்தப் படத்தில் நாயகன் பேசும் வசனங்கள், பெண்கள் காட்டப்பட்ட விதம் குறித்து பெண்ணியவாதிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பாலிவுட்டில் இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘ஆதித்யா வர்மா’ படத்துக்கும் இதுபோல் எதிர்ப்பு வருமா? என விக்ரமிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“பிரபலமான ஒரு படத்தின் மறு ஆக்கம் இது. வீண் பரபரப்பினால் மட்டுமே அந்தப் படம் ஓடவில்லை என்று நான் நினைக்கிறேன். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தைப் பிடித்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர், பாலினத்தினர் மட்டுமே என்று சொல்லிவிட முடியாது. எல்லோருக்கும் அந்தக் காதல் கதை சொல்லப்பட்ட விதம் பிடித்திருந்தது.
‘கபிர் சிங்’, ‘அர்ஜுன் ரெட்டி’யைவிட கொஞ்சம் அப்பாவி ‘ஆதித்யா வர்மா’. விஜய் தேவரகொண்டா, ஷாகித் கபூரைவிட துருவ் இளையவர். கல்லூரி மாணவர் போல. இயக்குநர் சந்தீப் வங்காவும், துருவ் இந்தப் பாத்திரத்தில் நடிக்கக் கச்சிதமானவர் என்று நினைத்தார்.
மற்ற இரண்டு படங்களிலும் அந்தக் கதாபாத்திரம் காட்டிய துணிச்சல், ஆண் என்ற பெருமை எல்லாம் துருவ் கதாபாத்திரம் காட்டாது. இது ரீமேக்காக இருந்தாலும், படத்தில் அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களின் தீவிரத்தைக் கூட்டவில்லை. அதனால், ‘கபிர் சிங்’ படத்துக்கு வந்ததைப் போல எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன்” எனப் பதிலளித்துள்ளார் விக்ரம்.