

திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று 'களவாணி 2' படத்துக்காக அளித்துள்ள பேட்டியில் ஓவியா தெரிவித்துள்ளார்.
சற்குணம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’. அதன் 2-ம் பாகத்தை மீண்டும் சற்குணமே இயக்கி தயாரித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, இளவரசு, சரண்யா பொன்வண்ணன், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு பேட்டியளித்தார் ஓவியா. அதில் தனக்கு திருமண ஆசையில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய ஆசைகள் குறித்து ஓவியா, “தமிழில் ஹாரர் கலந்த படமொன்றில் நடிக்கவுள்ளேன். எந்தவொரு ஊரில் செட்டில் ஆகாமல் சுற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது தான் நடிக்கத் தொடங்கியுள்ளேன். இன்னும் சம்பாதிக்கவே தொடங்கவில்லை. ஆகையால் சொந்தப் படம் எடுக்கும் எண்ணமில்லை.
நம்பர் ஒன் நடிகையாக வேண்டும், பெரிய பங்களா போன்ற வீடு ஆகியவற்றில் எல்லாம் ஆர்வமில்லை. சிறிய வீடு இருந்தால் போதும். அது இல்லாவிட்டால் கூட இமயமலைக்கு சென்று நேரத்தை செலவிட நினைக்கிறேன்
திருமண பந்தத்தில் உடன்பாடு இல்லை. ஆகையால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எப்போதுமே சுதந்திர பறவையாக இருக்க விருப்பம். கடைசிவரை நடித்துக் கொண்டிருந்தால் போதுமானது. எனக்கு நண்பர்கள், எதிரிகள் என யாரும் கிடையாது. அனைவரிடமும் ஒரே மாதிரி தான் பழகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஓவியா.