

ஆகஸ்ட் 15 அன்று ஜெயம் ரவி நடிப்பில் ’கோமாளி’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் நடிப்பில் பெரும் பொருட்செலவில், மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் ’சாஹோ’ படம் இதே தினத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தின வார இறுதியில் ’சாஹோ’ வெளியாகும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே தேதியில் அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ படமும் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் படம் சற்று முன்னதாகவே வெளியாகவுள்ளது.
தற்போது தமிழில் வேறு பெரிய நட்சத்திரத்தின் படம் அன்று வெளியாகவில்லை என்பதால், ’கோமாளி’ படத்தை ஆகஸ்ட் 15 அன்று வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது.
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்க, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே என்ற இரண்டு கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆழி இசையமைக்கிறார். யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின. இதில் அதில் ஜெயம் ரவியின் பல்வேறு தோற்றங்கள் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.