

அரசியலில் வாரிசுகள் ஓவர்நைட்டிலேயே மேலே வந்துவிடுகிறார்கள் என இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘அசுர குரு’. மஹிமா நம்பியார் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், கோவிந்த் நம்தேவ், யோகி பாபு, ஜெகன், ஊர்வசி, மனோபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கணேஷ் ராகவேந்திரா பாடல்களுக்கு இசையமைக்க, பின்னணி இசை அமைத்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், “விக்ரம் பிரபு தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற உயரத்தை இன்னும் அடையவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு. சினிமாவில் மட்டும்தான் வாரிசுகளுக்கு கொஞ்சம் இடைஞ்சல் ஆகிறது. ஆனால், அரசியலில் அப்படி இல்லை. ஓவர்நைட்டில் மேலே வந்து விடுகிறார்கள்.
நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஏன் சொல்கிறேன் என்றால், என் மகன், பாண்டியராஜன் மகன் எல்லாம் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசியலில் இருப்பவர்களுக்கு உடனே ஓகே ஆகிவிடுகிறது. சினிமாவில் அப்பாக்கள் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அது தானாக அமைய வேண்டும்” என்றார்.
யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்று கே.பாக்யராஜ் சொன்னாலும், அவரது பேச்சு உதயநிதியையே மறைமுகமாகக் குறிப்பிட்டது.