பாலசந்தரின் 5 கட்டளைகள்’’ - சிவகுமார் நெகிழ்ச்சி

பாலசந்தரின் 5 கட்டளைகள்’’ - சிவகுமார் நெகிழ்ச்சி
Updated on
1 min read

''பாலசந்தர் தனக்குத்தானே  ஐந்து கட்டளைகளை வைத்துக்கொண்டு, அதன்படி நல்ல நல்ல படங்களைக் கொடுத்தார். ஒரேயொரு பாலசந்தர்தான். அவரின் இடத்தை நிரப்ப எவராலும் முடியாது’’ என்று நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இயக்குநர் கே.பாலசந்தரின் 89வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:

பாலசந்தர் சார் மிகப்பெரிய இயக்குநர். திருவாரூருக்குப் பக்கத்தில் சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர். அவருடைய தந்தை மிட்டாமிராசோ, ஜமீனோ இல்லை. ஒரு சாதாரண கிராம முன்சீப். படிப்படியாக வளர்ந்தார். சிறுவயதிலேயே நாடகத்தின் மீதும் கலையின் மீதும் ஆர்வம் இருந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி. முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். இதுதான் அவர் குடும்பத்துக்குக் கிடைத்த முதல் மகிழ்ச்சி.

பிறகு சென்னையில், ஏஜிஎஸ் ஆபீசில் வேலைக்குச் சேர்ந்தார். திருவல்லிக்கேணியில் உள்ள நடிகர் ஸ்ரீகாந்தின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, நாடகங்கள் எழுதினார். அப்போது நாகேஷை நடிகர் பாலாஜி சிபாரிசு செய்தார். ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தை ஆங்கிலத்திலேயே எழுதி, அதில் மேஜராக பாலசந்தரே நடித்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ஏவிஎம்மில் கதை ஓகே ஆனது. ஆனால் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘சர்வர்சுந்தரம்’ படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள். படப்பிடிப்பு நடைபெறுவதை கவனித்து வந்தவர், அடுத்ததாக தானே இயக்குநரானார். எல்லோருக்கும் முன்னுதாரணமானார்.

‘நீர்க்குமிழி’, ‘நவக்கிரகம்’, ’எதிரொலி,’ ’மேஜர் சந்திரகாந்த்’ என வரிசையாக படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். எழுபதுகளில்... ஒருநாள் அவருக்கு ஹார்ட் அட்டாக். மருத்துவமனையில் இருந்த போது அவருக்குள் சிந்தனை. ‘இறந்துவிடுவோமா? எதுவுமே செய்யாமல், செத்துப்போய்விடுவோமா? ஏதேனும் செய்து ஜெயித்தாகவேண்டும்’ என்று முடிவுக்கு வந்தார்.

இனிமேல், சிகரெட்டைத் தொடவே கூடாது. பெரிய நடிகர்களை வைத்துப் படமெடுக்கவே கூடாது. நல்ல கருத்துகளைச் சொல்லும் விதமாகவே படங்கள் பண்ணவேண்டும். பெண்களைப் போற்றக்கூடிய விதமாகவும், அவர்களை அடிமைத்தனத்தில் இருந்து மேலே கொண்டு வரும் விதமாகவும் படங்கள்  எடுக்கவேண்டும், தொடர்ந்து படங்களை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தனக்குத்தானே சில கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டார் பாலசந்தர்.

அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், மூன்றுமுடிச்சு, நூல்வேலி, தப்புத்தாளங்கள், அக்னிசாட்சி, சிந்துபைரவி என பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களையும் சமூகக் கருத்துகளையும் கொண்டு படமெடுத்தார். அதில் ‘அக்னிசாட்சி’ மிகச்சிறந்த படமாக இருந்தும் ஓடவில்லை. அதில் ரொம்பவே கோபமாகிவிட்டார். ‘என்னடா பண்றது. இதுக்கு மேல என்ன பண்றது?’ என்று கத்தினார். அப்படியே ஆறுமாதம் முடங்கிக்கிடந்தார்.

சினிமா மல்யுத்தப் போட்டி மாதிரிதான். ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு... என்று சொல்லிக் கொண்டே இருக்கும். விழுந்தவர்கள் எழவேண்டும். இல்லாவிட்டால், அவ்வளவுதான் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், பாலசந்தர் விஸ்வரூபமெடுத்து எழுந்தார். அதுதான் ‘சிந்துபைரவி’. தமிழ் சினிமாவில் ஒரு எம்ஜிஆர், ஒரு சிவாஜி, ஒரு பாலசந்தர்.

இவ்வாறு சிவகுமார் பேசினார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in