

‘’அடுத்த ரஜினி நாமதான்னு நினைச்சேன்’’ என்று பாலசந்தர் பிறந்தநாள் விழாவில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசினார்.
இயக்குநர் கே.பாலசந்தரின் 89வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இயக்குநர் ஆர்.பார்த்திபன் பேசியதாவது:
உங்களுக்குள் சினிமா ஆர்வம் இருந்தால், உங்களிடம் சின்ஸியாரிட்டி இருந்தால், உங்களிடம் பர்பெக்ஷன் இருந்தால், உங்களிடம் கவிதைத்தனம் இருந்தால், உங்களிடம் நேர்மையும் கோபமும் இருந்தால், உங்களிடம் பாலசந்தர் இருக்கிறார் என்று அர்த்தம். நம் செல்போனில் பார்க்கபடாத மெசேஜ்கள் இருக்கும்தானே. அதேபோல், பாலசந்தரின் மரனம் எனும் செய்தி, என் நினைவுக்குள் நான் வைத்திருக்காத தகவல்.
என்னுடைய அப்பா இறந்ததற்கு கூட அவ்வளவு கவலைப்படவில்லை. ஆனால் பாலசந்தரின் மரனம், என்னை அழவைத்துவிட்டது. என்னால் இன்னும் அந்த இழப்பை மறக்கமுடியவில்லை.
சமீபத்தில் என்னுடைய ‘ஒத்தசெருப்பு’ படத்தின் ஆடியோ விழாவில், ‘இந்தப் படத்தை பாலசந்தர் சார் பார்த்தால், வெகுவாகப் பாராட்டியிருப்பார்’ என்று இயக்குநர் லிங்குசாமி சொன்னார். நானும் அதை நினைத்துப் பார்த்தேன்.
கமல் சாருக்கு சிவாஜி சார் எப்படியோ... அதுபோல எனக்கு கமல் சார். அதிலும் பாலசந்தர் சார் படத்தில் கமல் பேசிய வசனங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள பாலசந்தர் அலுவலகத்துக்கு எதிரே நின்று கொண்டே இருப்பேன். டைரக்டர் வந்ததும் அவரிடம் நடித்துக் காட்டவேண்டும், பேசிக்காட்ட வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். ஆனால் அவர் கார் வரும் போது, ஒளிந்துகொள்வேன்.
இந்த சமயத்தில்தான், கவிதாலயா தயாரிப்பில் உருவான ‘புதுக்கவிதை’ படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் ஐந்தாறு காட்சிகளில் வருவேன். சின்ன கேரக்டர்தான். படத்தை ‘ரஷ்’ பார்த்த பாலசந்தர் சார், ‘இந்தப் பையன் யாரு, கண்ணு ரொம்ப நல்லாருக்கு. இவன் மேல கண்ணு வைச்சுக்கணும். பெரியாளா வரப்போறான்’ என்று சொன்னதாக, பிரமிட் நடராஜன் சார் சொன்னார்.
அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘சரி... அடுத்த ரஜினி நாமதான். பாலசந்தர் சார், நம்மளை உயரத்துக்குக் கொண்டு வராம விடமாட்டாரு’என்று துள்ளி குதித்தேன். ரஜினி மாதிரியே நாமளும் கருப்புதான் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன்.
அந்த சமயத்தில் ‘புதுக்கவிதை’ வந்தது. அப்போது நான் திருச்சியில் இருந்தேன். என் தம்பி படம் பார்க்க அழைத்தான். ‘இல்ல, படத்துல அஞ்சாறு சீன் வரேன். என்னைப் பாத்துட்டு, கூட்டம் கூடிரும். நீ போயிட்டு வா. அடுத்த ஷோ இல்லேன்னா நைட் ஷோ போயிக்கிறேன்னு சொன்னேன். தம்பி படம் பாத்துட்டு வந்தான். ‘மேட்னி ஷோல நீ வரலை. ஒருவேளை ஈவினிங் ஷோ படத்துல நீ வர்றியானு தெரியல’ன்னு சொன்னான். படத்துல நான் வந்த காட்சிகளெல்லாம் கட் செய்யப்பட்ட தகவல், அப்புறம்தான் தெரிஞ்சுச்சு. நொந்து போயிட்டேன். வாழ்க்கையே சூன்யமாகிட்ட மாதிரி ஒரு உணர்வு. அதன் பிறகுதான், பாக்யராஜ் சார்கிட்ட சேர்ந்தேன்.
அதற்குப் பிறகு, ‘புதியபாதை’ ரிலீஸான போதும், விருது கிடைத்த போதும், முதல் கடிதம் பாலசந்தர் சாரிடம் இருந்துதான் வந்தது. என்னுடைய ‘ஹவுஸ்ஃபுல்’, ‘குடைக்குள் மழை’ படமெல்லாம் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினார் பாலசந்தர் சார்.
இவ்வாறு பார்த்திபன் பேசினார்.