

மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதை உறுதி செய்திருக்கிறார் விக்ரம்.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அபி, அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கடாரம் கொண்டான்'. கமல் தயாரித்துள்ள இந்தப் படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. ஜுலை 19-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் விக்ரம். அப்போது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதை உறுதி செய்தார். "மணி சாருடைய அடுத்த படத்தில் நடிக்கவுள்ளேன். எனது காட்சிகளுக்கான படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடக்கத்தில் துவங்கவுள்ளது" என்று தெரிவித்துள்ளார் விக்ரம்.
தற்போது 'பொன்னியின் செல்வன்' கதையைத் தான் படமாக்கவுள்ளார் மணிரத்னம். இதன் மூலம் விக்ரம் அதில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், இதில் நடிக்க அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, அனுஷ்கா, அமலா பால், மோகன் பாபு உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் மணிரத்னம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
'பொன்னியின் செல்வன்' படத்தை உறுதிப்படுத்தியது மட்டுமன்றி, 'மகாவீர் கர்ணா' திரைப்படம் மணிரத்னம் படத்தை முடித்தவுடன் துவங்கும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார் விக்ரம்.