அமலா பாலுக்கு விஷ்ணு விஷால் ஆதரவு

அமலா பாலுக்கு விஷ்ணு விஷால் ஆதரவு
Updated on
1 min read

விஜய் சேதுபதி படத்தில் இருந்து அமலா பால் நீக்கப்பட்ட விவகாரத்தில், அமலா பாலுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், ‘மீகாமன்’, ‘தடையறத் தாக்க’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, வில்லனாக நடிக்கிறார்.

இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இதன் படப்பிடிப்பு, கடந்த 14-ம் தேதி பழநியில் தொடங்கியது. எஸ்.பி.ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார். விஜய் சேதுபதி - மகிழ் திருமேனி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. பின்னர், ஊட்டியில் முக்கியக் காட்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்தப் படத்தில், அமலா பால் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், தேதிகள் பிரச்சினை காரணமாக அமலா பால் இதிலிருந்து விலகுவதாகவும், அவருக்குப் பதிலாக மேகா ஆகாஷ் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. ஊட்டியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் மேகா ஆகாஷ் கலந்து கொண்டுள்ளார்.

இந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அமலா பால். அதில், ‘ஆடை’ படத்தின் டீஸரைப் பார்த்த பிறகுதான் தயாரிப்பாளர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அமலா பால் அறிக்கையை முழுமையாகப் படிக்க: விஜய் சேதுபதி படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு அமலா பால் விளக்கம்

இந்நிலையில், அமலா பாலுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.

“ஒரு நடிகர் துணிந்து பேசுவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. பலமுறை இப்படி நடிகர்கள் பக்கம்தான் எப்போதும் தவறு என்பது போல சம்பவங்கள் நடந்துள்ளன. எவ்வளவு தயாரிப்பாளர்களால் நான் எப்படியெல்லாம் மோசமாக நடத்தப்பட்டேன் என்பதைச் சொல்லவேண்டும் என்று பலமுறை நினைத்துள்ளேன். ஆனால், எப்போதும் அவர்களை ‘முதலாளி’ என்று மரியாதையுடன்தான் அழைத்திருக்கிறேன்.

நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போலத்தான் சினிமாவுக்கும். சில அற்புதமான தயாரிப்பாளர்களுடனும் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால், உணர்வு, தொழில், உடல் ரீதியிலும் நடிகர்களுக்கு எதிராக நடக்கும் இந்த அநீதி பற்றிப் பேசும் நேரம் வந்துவிட்டது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in