Published : 15 Aug 2017 10:52 AM
Last Updated : 15 Aug 2017 10:52 AM

குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்

‘கரகாட்டக்காரன்’, ‘கோவா’ உட்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 79.

தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட சண்முகசுந்தரம், பள்ளி, கல்லூரி நாட்களில் மேடை நாடகங்களில் நடித்துவந்தார். 1963-ல் ‘ரத்த திலகம்’ படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். கல்லூரி காலத்திலேயே சென்னைக்கு வந்தவர் தொடர்ந்து ‘கர்ணன்’, ‘திருவிளையாடல்’, ‘குறத்தி மகன்’, ‘வாழையடி வாழை’, ‘கரகாட்டக்காரன்’, ‘கிழக்கு வாசல்’, ‘நம்ம ஊரு ராசா’, ‘கோவா’, ‘தமிழ்ப்படம்’, ‘சென்னை 28’, ‘கலகலப்பு’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திம் ஏற்று நடித்தவர்.

முன்னாள் முதல்வர் அண்ணா, கவிஞர் கண்ணதாசன் இருவரும் சண்முகசுந்தரம் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தனர். பல மேடை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பை கவிஞர் கண்ணதாசன் இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சினிமாவுக்கு வந்த பிறகும் வானொலி நாடகங்களில் நடித்துவந்தார். சின்னத்திரையில் ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘வம்சம்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர். கடைசியாக சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்தார். ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் இருந்து ரீமேக் செய்யப்படும் படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றினார்.

சென்னை மயிலாப்பூர் ரெங்கா சாலையில் வசித்து வந்த அவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று காலை 8.30 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார். அவருக்கு சுந்தரி என்ற மனைவி, பாலாஜி என்ற மகன், கீதா, பவித்ரா என்ற மகள்கள் உள்ளனர்.

திரையுலகினர் அஞ்சலி

நடிகர் சிவகுமார், நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் ராதாரவி, மனோபாலா, விஜயகுமார் உள்ளிட்ட திரையுலகினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்கம் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘நூற்றுக் கணக்கான படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்தவர் சண்முகசுந்தரம். கடினமான உழைப்பு, திறமையால் நற்பெயரும் புகழும் பெற்று விளங்கியவர். அவரது மறைவு நாடக மற்றும் திரை உலகுக்கும், நடிகர் சமூகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் சண்முகசுந்தரத்தின் உடல் இன்று மாலை 3 மணிக்கு மயிலாப்பூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x