

விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக 4 பாடல்களை முடித்துக் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
தற்போது இப்படத்துக்கான இறுதிப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இருவருமே உறவுக்காரர்களாக இருந்தாலும், நீண்ட நாட்களாக ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்புக்காக காத்திருந்தார் ஜி.வி.பிரகாஷ்.
'ஜென்டில்மேன்', 'உழவன்', 'மே மாதம்', 'பம்பாய்', 'இந்திரா' மற்றும் 'முத்து' ஆகிய படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். ஜி.வி.பிரகாஷ். அதற்குப் பிறகு தற்போது 'மெர்சல்' படத்தில் தான் பாடியுள்ளார்.
மேலும், 'மெர்சல்' படத்தில் விஜய்யுடன் பல்வேறு நடிகர் நடித்துவரும் நிலையில் மிஷா கோசல் மற்றும் சீனு மோகன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
பாலா இயக்கத்தில் உருவாகிவரும் 'நாச்சியார்' படத்தில் ஜோதிகாவுடன் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அதனைத் தொடர்ந்து 'ஐங்கரன்' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.