

‘விவேகம்' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் மற்றொரு படத்தில் சிவா - அஜித் இணைந்து பணிபுரிய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது.
படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்து பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது.
காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
'விவேகம்' படத்தைத் தொடர்ந்து சிவா மற்றும் அஜித் இருவரின் அடுத்த படங்கள் குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இது குறித்து விசாரித்த போது, "தொடர்ச்சியாக சிவாவுடன் பணியாற்றுவது அஜித்துக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆகையால் அடுத்ததாக தனக்கு கதையிருந்தால் கூறுமாறு சிவாவிடம் கேட்டுள்ளார் அஜித். இருவரும் இணைந்தால் அக்கதையை தான் தயாரிப்பதாக ஏ.எம்.ரத்னம் தெரிவித்திருக்கிறார். ஆனால், இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை" என்று தெரிவித்தார்கள்.