

தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் 'அல்வா வாசு'. இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக தன்னுடைய திரைவாழ்க்கையில் பயணம் செய்தார்.
அமைதிப்படை, அருணாச்சலம், சிவாஜி, மற்றும் நடிகர் சத்யராஜுடன் பல படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமானவை.
கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார் வாசு. இன்று மருத்துவர்கள், ’அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை, விரைவில் உயிர் பிரிந்து விடும் அதனால் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்’ என்று கூறியுள்ளதாக, வாசுவின் மனைவி திருமதி. அமுதா வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார்.