

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது குறித்து மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை தாணு வெளியிடவுள்ளார். தணிக்கைப் பணிகள் முடிவடைந்தவுடன், படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளது படக்குழு.
'வேலையில்லா பட்டதாரி 2' படத்துக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் செளந்தர்யா ரஜினிகாந்த். அப்போது அவர் பேசியதாவது:
‘வேலையில்லா பட்டதாரி 2’வில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பிரதிபலிக்கும் வலுவான கதாபாத்திரத்தில் கஜோல் வருகிறார். அவர் பெரிய நடிகையாக இருந்தாலும் படப்பிடிப்பில் இனிமையாகவே பழகினார். எனது இயக்கத்தில் இது முக்கிய படமாக இருக்கும். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக வாய்ப்பு உள்ளது.
அஜித் நடிக்கும் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி படத்தை இயக்க விரும்புகிறேன். புதிதாக சினிமாவுக்கு வரும் பெண் இயக்குநர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு துறைகளிலும் பெண்கள் அதிகம் வரவேண்டும்.
அப்பா நடித்த 'பாட்ஷா' படத்தின் 2-ம் பாகத்தை யாராலும் எடுக்க முடியாது. தமிழ் திரையுலகில் ஒரே ஒரு பாட்ஷா தான். கமல் சாரின் மகள்கள் இருவரும் சினிமாவில் நடிக்கிறார்கள். எனக்கும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கதை பிடிக்காததால் மட்டுமே நடிக்கவில்லை. நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் சினிமாவில் கண்டிப்பாக நடிப்பேன்.
சமீபத்தில் கமல் சார் பேசிய கருத்துகள் சர்ச்சையாகி உள்ளது. அவர் உறுதியானவர். எந்த விஷயமாக இருந்தாலும் அதை நன்றாக உணர்ந்தே பேசுவார். அப்பாவும் அவரும் நீண்டகால நண்பர்கள். அப்பா அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து கருத்துச்சொல்ல விரும்பவில்லை.
இன்றைய அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் பற்றியும் அப்பா எங்களிடம் பேசுவார். என் கருத்தைக் கூட கேட்பார். தற்போது அவருடைய நடவடிக்கைகள் குறித்து குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மகளாக நான் நினைப்பது ஒன்று மட்டுமே. அவர் உடல்நலத்துக்கு நாங்கள் முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறோம். பிறகு அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் குடும்பத்தினராகிய நாங்கள் முழுஆதரவு கொடுப்போம்.
இவ்வாறு செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.