திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்: தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்

திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்: தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்
Updated on
2 min read

திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜிஎஸ்டி வரி போக, தமிழக அரசும் கேளிக்கை வரி விதித்துள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலை யில், தமிழ்த் திரைப்பட தயாரிப் பாளர் சங்கம் சார்பில் திரைய ரங்க உரிமையாளர்களுக்கு வேண்டு கோள் கடிதம் ஒன்று அனுப்பப் பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறி யிருப்பதாவது:

தன்னிச்சையாக முடிவெடுத்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வரும் 3-ம் தேதி (நாளை) முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் நலனுக்காகத்தான் நாம் அனைவரும் பாடுபட்டு வருகிறோம். ஆனால் 20 தயாரிப்பாளர்கள் முற்றி லுமாக பாதிக்கப்படும் வகையில் ஒரு முடிவை எடுப்பது தயாரிப் பாளர்கள் சங்கத்துக்கு உடன்படி யாத விஷயம். மாநில அரசுக்கு நம் தேவைகளை புரிந்து நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் தரவேண்டிய தேவையும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக ஆதரவு அளிக்க இயலாது. மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டி ருந்தது.

முதல்வருடன் சந்திப்பு

தமிழ் திரைப்பட வர்த்தக கூட்டமைப்பினர் நேற்று காலை முதல்வரை சந்தித்து கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்த சந்திப்பு குறித்து திரைப்பட வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, “கேளிக்கை வரி 30 சதவீதம், ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் என மொத்தம் 58 சதவீத வரி நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று முதல்வரிடம் கூறினோம். அப்போது திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை குறைக்க முதல் வர் உறுதியளித்துள்ளார்” என்றார்.

விஷால் கோரிக்கை

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறும்போது, “பிராந்திய மொழி சினிமாக்களை குறைந்த ஜிஎஸ்டி வரம்பில் வைக்கும்படி மத் திய அரசிடம் கூட்டாக ஒரு விண் ணப்பத்தை முன்வைத்துள்ளோம். தற்போது வசூலிக்கப்படும் கேளிக்கை வரியும் ஜிஎஸ்டியில் அடங்குமா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

கேளிக்கை வரி தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்பது தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் முறையிட தயாரிப் பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், திரையங்கு உரிமை யாளர்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால் கடந்த வாரம் வெளியான படங் கள் பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து ‘இவன் தந்தி ரன்’ பட இயக்குநர் கண்ணன், “தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த குழந்தையின் கழுத்தை உடனே அறுத்தால் என்ன வலி இருக்குமோ, அந்த வலியை உணர்கிறேன். தொடர்ச்சியாக திரையரங்குகளில் படம் ஓடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார் கண்ணீருடன்.

இதுகுறித்து டி.ராஜேந்தர் பேசும்போது, “சினிமா மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி குரல் கொடுக்காதது ஏன்? அரசியல் வாதிகள் சேவை செய்யும் போது எங்களுக்கு ஏன் சேவை வரி? சினிமா டிக்கெட் விலையை அதிகரிக்கும் முடிவில் நான் முரண்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் “திரைப்படங்க ளுக்கு யு சான்றிதழ் வழங்குவதிலும், வரிச் சலுகை வழங்குவதிலும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பெரும் ஊழல் நடந்து வருகிறது. இவை ஜிஎஸ்டியால் ஒழிக்கப்படும் என்பதே ஒரே ஆதாயம். அது தவிர்த்து 30 சதவீதம் சேவை வரியும் இருக்கும் என்றால் இந்த வரி அறிவிப்பும் ஒரு தவறே” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in