

இரண்டரை வருட உழைப்பான 'காவியத்தலைவன்' திரைப்படம் கவனிக்கப்பட்டு தமிழக அரசின் 10 விருதுகள் கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் வசந்தபாலன்.
2009 - 2014ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவன்' படத்துக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளன.
'காவியத்தலைவன்' படத்துக்கு 10 விருதுகள் கிடைத்திருப்பது குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
'காவியத்தலைவன்' திரைப்படத்திற்கு தமிழக அரசின் 10 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகர், வில்லன்,குணச்சித்திர நடிகர், குணச்சித்திர நடிகை, கலை இயக்கம், இசை, ஒளிப்பதிவு, பின்னணி பாடகர், உடைகள், ஒப்பனை இந்த 10 பிரிவுகளில் விருதுகள் வழக்கப்பட்டு உள்ளன.
முறையே நடிகர் சித்தார்த், பிரிதிவிராஜ், நாசர், குயிலி, சந்தானம், ஏஆர் ரகுமான், நீரவ் ஷா, ஹரிசரண், செல்வம்,பட்டணம் ரசீத் ஆகியோர் விருது பெறுகின்றனர்.
'காவியத்தலைவன்' மக்களிடம் பெரும் வரவேற்பை பெறவில்லை விருதுகளாவது வந்து சேருமா என்று ஒரு பெரும் ஏக்கம் இருந்தது. ஆசை ஆசையாய் பண்ணிய திரைப்படம். இரண்டரை ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் உழைப்பு இவை சரியாக கவனிக்கப்படவில்லை என்ற கவலை ஒரு கலைஞனாக அதிகமாக எனக்கு இருந்தது.
தேசிய விருதுக்கு ஏதோ நிர்வாக முறைகேடால் அனுப்பப்படவில்லை. பிலிம்பேர் விருதும் கிடைக்கவில்லை. அது பலநாள் என் இரவு துரக்கத்தை ஒரு கொசுவை போல மொய்ந்து கொண்டிருக்கும்.நான் தூங்கியவுடன் கொசு மண்டைக்குள் போய் குடையும் ஒரு வண்டை போல.
இப்போது காவியத்தலைவனுக்கு 10 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.ஒரு தரமான படத்தைத்தான் தந்திருக்கிறோம்.அதற்கு இந்த விருதுகள் தான் சாட்சி என்று தோன்றியது.
இப்போது எனக்கு 'அங்காடித்தெரு' படத்திற்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது 'அங்காடித்தெரு' படத்தை பொறுத்தவரை அது போதிய அளவு கவனிக்கப்பட்டுவிட்டது.அதனால் எனக்கு கிடைத்த விருதை விட 'காவியத்தலைவன்' படத்திற்கு கிடைத்த 10 விருதுகள் அதிக சந்தோசத்தையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளன.
அது அடுத்து எடுக்க இருக்கும் படத்திற்கு ஊக்க மருந்தாக உள்ளது.
தமிழக அரசுக்கும்விருது குழுவுக்கும் என்னுடன் பணியாற்றி அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்
இவ்வாறு வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.