

இயக்குநர் பிரபு சாலமன் போலி ட்விட்டர் கணக்கால், சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
சமூக வலைதளத்தில் அவ்வப்போது, தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயரில்வரும் போலி ட்விட்டர் கணக்கால் சர்ச்சை எழும். அந்த வரிசையில் தற்போது இயக்குநர் பிரபுசாலமனும் சிக்கியுள்ளார்.
அவருடைய பெயரில் இயங்கிவரும் போலி ட்விட்டர் பக்கத்தில், "நாயகிகள் - ஒரு நாள் சம்பளம் 85,000 + 2 கோடி சம்பளம் + டிரைவர், ஏசி கேரவன். ஆனால் ஒரு நாள் 5 மணி நேரத்துக்கு மேல் நடிக்க மாட்டார். பெரிய நடிகரின் மகள்" என்று ட்வீட் இடம்பெற்றது.
அந்த தளத்தை பின் தொடர்பவர்கள் அனைவருமே, அந்த நடிகை ஸ்ருதிஹாசன் தான் என்று குறிப்பிட்டு ட்வீட் செய்யவே சர்ச்சை உருவானது.
இறுதியாக இது குறித்து பிரபுசாலமன் தரப்பில் கேட்ட போது, "எந்தவொரு சமூக வலைதளத்திலுமே பிரபுசாலமன் கிடையாது. தற்போது 'கும்கி 2' படத்துக்கான திரைக்கதை இறுதி செய்வதிலும், நடிகர்களை இறுதி செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்" என்று தெரிவித்தார்கள். இம்மாத இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.