

வரி தொடர்பான விஷயங்கள் முடிவுக்கு வரும்வரை புதிய படங்களைத் தயாரிக்கப் போவதில்லை என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான முதல் 3டி தொழில்நுட்ப படம் '2.0' ஆகும். 3டி கேமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை திரையிடுவது தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழுமையான 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் லைகா நிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் ராஜூ மகாலிங்கம் பேசியதாவது:
400 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம், முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் 20000-த்திற்கும் அதிமான 3டி திரையரங்குகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 1500 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. நிறைய திரையரங்குகள் 3டி-யில் மாற்றப்பட வேண்டும் என்று விருப்பப்படுகிறோம்.
ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி தொடர்பான விஷயங்கள் முழுமையாக முடிவுக்கு வரும் வரை புதிய படங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்று தலைமை அலுவலகத்திலிருந்து கூறியுள்ளார்கள். ஆகையால் இந்த தொழிலில் இருக்கும் தொழிலாளர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். லைகா நிறுவனம் சார்பாக தமிழக அரசை, கேளிக்கை வரியை நீக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு பேசினார் ராஜூ மகாலிங்கம்