

டிக்கெட் விலையில் ஜிஎஸ்டி வரியோடு கூடுதலாக விதிக்கப்பட்ட 30 சதவித மாநில வரி பற்றி முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் இந்த வாரம் நடைபெறவுள்ளது.
"வியாழக்கிழமை இந்த கூட்டம் நடக்கும். திரைத்துறையை சேர்ந்த 8 பேர் இந்த குழுவில் இருப்பார்கள்" என துறையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். திரையரங்க உரிமையாளர் கூட்டமைப்பின் தலைவர் அபிராமி ராமநாதனும், கூட்டம் நடக்கும் நாள் பற்றிய தகவலைத் தாண்டி வேறு விவரங்கள் தர மறுத்துவிட்டார்.
தமிழ் திரைப்பட வர்த்தக சபையைச் சேர்ந்த ராமநாதன், அருள்பதி, (திருப்பூர்) சுப்பிரமணியம் மற்றும் (ஐட்ரீம்ஸ்) மூர்த்தி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். மீதமிருக்கும் நான்கு பேர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், கதிரேசன், பிரபு மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர். மேலும் இந்தக் குழுவில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை, வீட்டு வசதித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகம், கிராமப்புற வளர்ச்சித் துறை, பஞ்சாயத் ராஜ், நிதித்துறை ஆகியவற்றைச் சேர்ந்த மாநில அரசு அதிகாரிகளும் இடம்பெறுவார்கள்.
டிக்கெட் விலை நிர்ணயத்தை மறு ஆய்வு செய்தும், கேளிக்கை வரி சம்பந்தமாக இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும் தமிழ் திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் வைத்துள்ள கோரிக்கையை ஆராய இந்த குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் குழு, இதற்கு முன் இருந்த வரிவிலக்கு விதிமுறைகளையும் பார்த்து, அதை புதிய கேளிக்கை வரியுடன் இணைத்து நீட்டிக்க முடியுமா என்று பார்க்கும். அல்லது தேவையான வழிமுறையை பரிந்துரை செய்யும் என பெயர் குறிப்பிட விரும்பாத திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறினார். அரசாங்கத்துக்கு சீக்கிரம் அறிக்கை தாக்கல் செய்ய குழுவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாநில அரசு விதித்த டிக்கெட் விலை கட்டுப்பாடோடு, விடுமுறை நாட்களிலும், பிரத்யேகக் காட்சிகளுக்கும் வேறு டிக்கெட் விலை நிர்ணயம் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் 1,127 திரையரங்குகளில் கிட்டத்தட்ட 6.14 லட்சம் இருக்கைகள் உள்ளன. டிக்கெட் விலை ரூ.120ஐ தாண்டக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.
© தி இந்து ஆங்கிலம்