

தமிழக அரசு, சினிமா மீதான இரட்டை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜிஎஸ்டி வரிக்கு மேலே, தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரி உண்டு என்ற அறிவிப்பால் தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று முதல் தமிழக திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
30% கேளிக்கை வரி விதிப்புக்கு பல்வேறு முன்னணி திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், முன்னணி நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், " இரட்டை வரி விதிமுறை கண்டிப்பாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை பாதிக்கும். ஆகையால் தமிழக அரசு இரட்டை வரி விதிமுறை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பு தொடர்பாக முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட யாருமே இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக மட்டுமே கமல் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.